Mr Zoo Keeper movie review: ஹீரோவாக புகழ்.. யுவன் மியூசிக்.. ரசிகர்களை ஈர்த்ததா?
J4 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “மிஸ்டர் ஜூ கீப்பர்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார் குக் வித் கோமாளி புகழ். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தின் விமர்சனம் காண்க.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான புகழ் அவ்வப்போது சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், கதாநாயகனாக நடித்த மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான குமுதம் விமர்சனம் பின்வருமாறு-
தமிழில் குழந்தைகள் பார்க்கும் படியான படங்கள் வருவதே அரிதாகிவிட்ட நிலையில், குழந்தைகளுக்காகவும், பெட் லவ்வர்ஸ்களுக்காகவும், இயற்கை ஆர்வலர்களுக்காகவும் ஒரு படம் வந்திருப்பது ஆச்சரியம்.
'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி ஆணாக இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு மனவளர்ச்சி குன்றிய இளைஞர், புகழ். அவரது அழகான மனைவி, ஷரீன் கன்ச்வாலா. அவர்களுக்கு ஒரு சுட்டிக் குழந்தை, அந்தக் குழந்தையும், புகழும், ஷரீனுக்குத் தெரியாமல் வீட்டில் வளர்க்கும் ஒரு பூனைக்குட்டி, வளர வளர புலி குட்டி என்று தெரிய வருகிறது. அதன்பின் அவர்கள் சந்திக்கும் பிரச்னைதான் கதை.
படத்தில் நிஜப்புலியைப் பயன்படுத்தியிருப்பதால் காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. அந்தப் புலியை அதிகாரிகள் புகழிடமிருந்து தூக்கிச் செல்லும் காட்சி நெகிழ்ச்சி. மலைவாழ் மக்களின் பிரச்னைகளை சிங்கம் புலி கோர்ட்டில் சொல்லும் காட்சி சுளீர். மாரிமுத்து, இமான் அண்ணாச்சி கேரக்டர்களுக்கு பொருத்தம். அந்த ஃபாரஸ்ட் ரேஞ்சரை பார்த்தாலே பகீர்.
குழந்தைகள் விரும்பும் படத்தை பெரியவர்களும் ரசிக்கும்படி ஜனரஞ்சமாக நகைச்சுவை, கலந்து, சமூகப் பிரச்னைகளை மையப்படுத்தி, இயக்குநர் ஜே.சுரேஷ் சொல்லியிருப்பது சிறப்பு. ஒளிப்பதிவு அருமை. யுவனின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் வேற லெவல்.
மலையில் வசிக்கும் புகழும், ஷரீனும் ஒரு புலிக்குட்டியை காட்டில் விடுவதற்கு நாள் முழுவதும் அலைவதற்கு காரணங்கள் இருந்தாலும், லாஜிக்கலாக இல்லை. அதேபோல் புகழ் வளர்க்கும் புலி, ஊர்மக்களை மற்ற வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது என்பதெல்லாம் தேவை இல்லாத டிராமா.
'மிஸ்டர் ஜூ கீப்பர்' - புலிப் பாசம்!
What's Your Reaction?






