ரஜினிக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி... !
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ’ஜெய் பீம்’ புகழ் தா.செ.ஞானவேல்ராஜா இயக்கியுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வேட்டையன் படத்தின் வேலைகள முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், திடீரென ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடி வயிறு வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 6 மணி அளவில் சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஜினிகாந்திற்கு அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்டப்படி சில பரிசோதனைகள் நடக்க உள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளது, எனவே ரசிகர்கள், நண்பர்கள் கவலைப்பட வேண்டாம் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது ஏற்பட்ட உடல்நல பாதிப்பால், அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்பது போன்ற தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 20ல் நட ந்த வேட்டையன் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜனிகாந்த் உற்சாகமாக பேசி, மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடிய நிலையில் மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டது திரைத்துறை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ல் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
73 வயதான ரஜினிகாந்த் 2011ம் ஆண்டு சிறுநீரக பிரச்னைகாக சிங்கப்பூரில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று நலமுடன் நாடு திரும்பினார். பின்னர் 2020ம் ஆண்டு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த போதும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?