குரங்கின் சேட்டையால் விபரீதம்... 800 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி...
ஆம்பூர் அருகே, சரிவான பாறையில் குரங்கு விட்டுச் சென்ற செல்போனை எடுக்கச் சென்ற இளைஞர், 800 அடி உயர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தரணிவேல். இவர் தனது நண்பர் கவின்குமாருடன் கைலாசகிரி மலைப்பகுதியில் நேற்று (ஏப்ரல் 3) நடை பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது தரணிவேல் தனது செல்போனை பாறை மீது வைத்து விட்டு, கவின்குமாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று, செல்போனை எடுத்துக் கொண்டு போய் மலைப்பகுதியில் உள்ள சரிவான பாறையின் அருகே வைத்து விட்டு ஓடிவிட்டது.
இதையடுத்து செல்போனை எடுப்பதற்காக இளைஞர் தரணிவேல் சரிவான பாறையில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறிய அவர், 800 அடி உயரம் கொண்ட மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த தரணிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக உமராபாத் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தரணிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கவின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?