இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே (56) இன்று பதவியேற்க உள்ளார்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபருக்கான தேர்தல் நேற்று முன் தினம் (செப்.21) நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு இடையே எந்தவித வன்முறையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே 24 மாவட்டங்களில் 16-ல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்து வந்தார். இருப்பினும் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை. இதன்காரணமாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது முறையாக வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 42.31 சதவீதம் வாக்குகள் பெற்று அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தையும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்க உள்ளார்.