நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் - நீதிமன்றம் உத்தரவு
நடிகை கஸ்தூரி ஜாமின் மனு மீது மனிதாபிமான அடிப்படையில் சென்னை காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மதுரை ஆகிய இடங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை. நானும் தெலுங்கு மருமகள் தான் என விளக்கம் அளித்தார்.இதையடுத்து, நடிகை கஸ்தூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கஸ்தூரி வீட்டில் இல்லாததால் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.சென்னை மற்றும் மதுரை போலீசார் தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் 16ம் தேதி இரவு ஆந்திராவில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். வருகிற 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் விசாரணை கைதிகள் அறையில் கைதிகளோடு கைதிளாக அடைக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைக்குள் பிரியாணி சமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகை கஸ்தூரி எதுவும் சாப்பிடவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இரவு தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரியின் வழக்கறிஞர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி ஜாமின் மனுவில், தான் சிங்கிள் மதர் எனவும் தனக்கு ஸ்பெஷல் சைல்ட் இருப்பதாகவும் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.இதற்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னை காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?