நீட் தேர்வு.. மாநிலத் துணைத்தலைவர் பதவி.. மனம் திறந்து பேசும் குஷ்பு!
சமீபத்தில் குஷ்புக்கு பாஜக மாநிலத் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து குஷ்பு குமுதம் இதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் விவரம் பின்வருமாறு-

பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் பதவி.. எப்படி உணர்கிறீர்கள்?
"பதவி ஒன்றும் எனக்குப் புதிது இல்லையே... பதவியை விட பணிக்குதான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். நாங்கள் 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாக இருக்கிறோம். எங்கள் அனைவருக்கும் தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கு. மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி. ஆனா, அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அது போய் சேர்வது இல்லை. அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.
இன்னைக்கு தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்துபோனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?
எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல்துறையைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் முதல்வரிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்."
இந்தப் பதவி கிடைத்தது பற்றி உங்கள் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்?
"என் மகள்களைப் பொறுத்த வரை அவங்களுக்கு நான் அம்மா. அதனால இந்தப் பதவி கிடைச்சிருக்குன்னு சொன்னப்ப 'ஓ அப்படியா'ன்னு ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிட்டாங்க. என் கணவர், வாழ்த்து சொல்லி ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். என் சகோதரர்களும் அதைப் பத்தி பெருசா ஒண்ணும் சொல்லல. என் குடும்பத்தைப் பொறுத்தவரை எனக்கு எதுவுமே தலைக்கு ஏறாம பாத்துப்பாங்க."
குஷ்பு என்றால் 'போல்ட் லேடி' என்பதுதான் மக்கள் எண்ணம். நீங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
"ஆமாம், நான் போல்ட்தான். நம்மகிட்ட உண்மை இருக்கும் போது அந்த தைரியம், தானா வந்துடும். என் மடியில கனம் இருந்தாதானே வழியில பயம் கொள்ள... மனசாட்சிக்கு நான் எப்பவுமே துரோகம் பண்ணதே இல்லை. நாம ஒரு தப்பு பண்ணிட்டு, அத மறைக்குறதுக்காக பொய் மேல பொய் சொன்னா எப்படி தைரியம் வரும்?
அதே சமயம் உண்மை மட்டுமே பேசுறப்ப, நம்மை எல்லாரும் புரிஞ்சுக்குவாங்கன்னு சொல்ல முடியாது. நமக்கு சரின்னு படுவது இன்னொருத்தருக்கு தப்பா தோணலாம். அதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு என்னால நிச்சயமா உண்மை பேசாம இருக்க முடியாது."
சவால்கள், மீம்ஸ், கலாய்ப்புகள்... இவற்றை எல்லாம் ரொம்பவும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறீர்கள். குஷ்புவின் சக்சஸ் ஃபார்முலாதான் என்ன?
"எனக்குன்னு பெருசா சக்சஸ் ஃபார்முலா எல்லாம் ஒண்ணுமில்லீங்க. இந்த மீம்ஸ் போடுறவங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இதெல்லாம் பார்த்து, நான் டென்ஷனாக மாட்டேன். இது ஜனநாயக நாடு. இங்கே அவங்கவங்க கருத்துகளைச் சொல்ல எல்லாருக்குமே உரிமை இருக்கு. அவங்க வேலையை அவங்க பார்க்குறாங்க. என் வேலையை நான் பார்க்கிறேன். இப்போ இங்கே யாருக்குமே நேரம் பத்தலை. அந்தளவுக்கு எல்லோரும் பிஸியா இருக்குற இந்த காலத்தில, அவங்க நேரத்தை செலவழிச்சு என்னைப் பத்தி அவங்க மீம்ஸ் போடுறாங்கன்னு சொன்னா, அதுக்கு நான் எவ்வளவு வொர்த்தா இருக்கணும்."
'நீட்' பற்றி உங்கள் கருத்து என்ன?
"அதுவும் ஒரு எக்ஸாம்தான். ஆனா, அதைப் பார்த்து பயந்துபோய், பசங்க சூசைட் பண்ணிக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
இதுல இரண்டு பாயின்ட் இருக்கு. ஒண்ணு, அப்பா, அம்மா பசங்ககிட்ட 'நாங்க உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம். அதனால நிச்சயமா நீ பாஸ் பண்ணியாகணும்னு அழுத்தம் கொடுக்கக் கூடாது. சின்ன வயசுலிருந்தே, 'நீ டாக்டர் ஆகணும்'னு அவங்களோட ஆசைகளை பசங்க மேல திணிக்கக் கூடாது. இங்கே இன்ஜினீயர் ஆகணும்னா JEE பாஸ் பண்ணியே ஆகணும். கலெக்டர் ஆகணும்னா IAS பாஸ் பண்ணியே ஆகணும். போலீஸ் ஆபீஸர் ஆகணும்னா IPS பாஸ் பண்ணியே ஆகணும். அப்படில்லாம் இருக்கிறப்ப 'நீட்' எக்ஸாமை மட்டும் ஏன் எதிர்க்கணும்? இந்த எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கு. ஆல் ஓவர் இந்தியாவில் இந்த எதிர்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுக்கு அரசியல் சாயம் கொடுக்குறாங்க.
நான் எந்தக் கட்சியையும் ப்ளேம் பண்ணல. இது ஒரு எக்ஸாம்தான். இதுக்குப் பயந்துட்டு தற்கொலை முடிவு எடுக்கறாங்க. இதை பாஸ் பண்ணலேன்னா பரவாயில்ல. கடவுள் ஒரு கதவை மூடிட்டார்னா, இன்னொரு கதவு திறக்கப் போறார்னு
அர்த்தம். உங்கள நம்புங்க. உங்க உள் உணர்வை நம்புங்க. வருஷா வருஷம் இந்த 'நீட்' எக்ஸாம் வரும்போது மட்டும், இது மாதிரி விஷயங்கள் பேசப்படும். மத்தபடி அரசியல் தலைவர்கள்கூட வேற பிரச்னைகளுக்குப் போயிடுவாங்க. 'கடவுள் வர முடியாத இடத்துக்குதான் மருத்துவர்களை அனுப்பி யிருக்காங்கன்னு சொல்வாங்க.
அதனால திறமையானவங்க மட்டும்தான் வரணும். இப்போ, என் பசங்க டாக்டர் ஆகணும்னு சொன்னா, அவங்களுக்கும் இதேதான் நான் சொல்வேன்.
'நீட்' இஸ் மேண்டடரி (Mandatory). எதிர்காலச் சந்ததியினருக்கு எப்பவுமே தைரியத்தை மட்டும்தான் மனசுல வளர்க்கணும். தேவையில்லாம பொலிடிக்கலா 'நீட்' எக்ஸாமை பத்தி அவங்க மனசுலே பயத்தை ஏற்படுத்தாம இருந்தாலே போதும்" என்றார்.
(கட்டுரை: ஸ்ரீவித்யா தேசிகன் / குமுதம் / 13.08.2025)
What's Your Reaction?






