நாங்களாம் அரசியலுக்கு வரக்கூடாதா? விஜய்யின் தலித் வாக்குகளை குறிவைக்கிறாரா தனுஷ்?

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் விஜய். இந்த சூழலில், தனுஷும் அரசியல் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் தலித் வாக்குகளை குறிவைத்து காய்களை நகர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.   

Jul 28, 2026 - 15:05
Jul 28, 2026 - 15:09
நாங்களாம் அரசியலுக்கு வரக்கூடாதா? விஜய்யின் தலித் வாக்குகளை குறிவைக்கிறாரா தனுஷ்?

சமீபத்தில் வெளியான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் விஜய் கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை துவக்கினார். கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றி 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 

முதல்வர் விஜய்யின் வெற்றி பங்களிப்பில் தலித் மக்களின் வாக்கும் மிக முக்கியமானது. தமிழகத்தில் உள்ள 45 தனி தொகுதிகளில் 24-ஐ தவெக கைப்பற்றியது. மேலும் பொது தொகுதிகளில் 8 தலித் வேட்பாளர்களை நிறுத்திய தவெக, அதில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.   இதனை வைத்து காலம் காலமாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த தலித் சமூக வாக்குகள் தற்போது முதல்வர் விஜய்யின் தவெகவிற்கு சென்றிருப்பதை உணர முடிகிறது. மேலும் தவெக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் உள்ளனர். இதுவரை தமிழக அமைச்சரவையில் தலித் சமூகத்தை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாகியிருப்பது இதுவே முதல் முறை. இதன் மூலம் முதல்வர் விஜய் தலித் சமூக பிரதிநிதித்துவத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் தனது சமீபத்திய மேடை  பேச்சுகளில் அரசியலுக்கு வருவதற்கான சமிக்ஞைகளை தெரிவித்து வருகிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இந்கழ்ச்சியில் பேசிய தனுஷ், “இங்கு இத்தனை பேர் கூடியிருக்கிறீர்கள். நம்முடைய ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு சரியான நோக்கமும் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்தோம், புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம், என்னை சந்தித்தோம் என இருந்துவிடக்கூடாது. உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை கவனியுங்கள். அவர்களுக்கு பிரச்சினை என்றால் உதவுங்கள்.

மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள். அதற்காக நம் ரசிகர்கள் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நன்றி” என பேசினார் தனுஷ். அவரது இந்த பேச்சு அரசியலுக்கான தொடக்கம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. ரசிகர்கள் மன்றத்துக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தியது, ரசிகர்களிடம் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்க சொல்வது, அரசியல் ஆசைக்கான தொடக்கம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் இதுகுறித்து கேட்ட போது, “அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும் இல்லை என்றால் இருக்கட்டும். அதைப்பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டோம். அப்பா என்றால் என்னப்பா அவ்வளவு தான். அதை தாண்டி எதுவும் கேட்க மாட்டோம்" என்றார். இந்த பேச்சுக்கள், நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள் அவரது அரசியல் பயணத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

இதில் தலித் வாக்குகளை தனுஷ் குறிவைக்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த தேர்தலில் தலித் வாக்குகள் அதிகளவில் தவெகவிற்கு விழுந்ததையடுத்து இந்த பேச்சு அடிபடுகிறது. தனது திரைப்படங்களில் அதிகளவில் தலித் பிரச்னைகளை விஜய் பேசாவிட்டாலும், அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் கணிசமானவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் கட்சி ஆரம்பித்தவுடன் அம்பேத்கரை தனது கொள்கை தலைவராக அறிவித்தது உள்ளிட்டவை தலித் வாக்குகள் தவெகவை நோக்கி வந்ததற்கான காரணங்களாக இருக்கலாம்.

இதற்கு நேர்மாறாக தனுஷ் தனது திரைப்படங்களில் தலித் அரசியலை பேசியுள்ளார். குறிப்பாக அசுரன், வடசென்னை படங்களில் தலித் அரசியலுக்கான கூறுகள் இருப்பதை காண முடியும். ஆனால் களத்தில் அவரது செயல்பாடுகளில் அதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஒரு வேளை அவர் கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தலித் அரசியல் குறித்த அவரது பார்வை, தலித் பிரச்னைகளில் அவரது நிலைப்பாடு  வைத்து தான் தலித் வாக்குகள் அவருக்கு செல்லுமா என்பதை நாம் அவதானிக்க முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow