சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? - விஜய பிரபாகரன் சொன்ன பதில்
உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சியில் இருக்கும்போது, அதை சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல நாங்களும் அதை முன் வைக்கிறோம்.
தவெகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பது என்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. எனவே இணைவோமா, இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜயை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக விஜய பிரபாகரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன், தேமுதிக சார்பாக முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறேன். கேப்டனின் மகனாக சிறுவயதில் வந்துள்ளேன். ஆனால் தற்போது அவர் இல்லாமல் கட்சி சார்பாக பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. பாராளுமன்றத் தேர்தலின்போது முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நினைவுகளை நினைத்து பார்க்கிறேன் என்றார்.
தவெக கொள்கை உடன்பாடு குறித்த கேள்விக்கு, விஜய் அண்ணா கட்சி தொடங்கி அவர் கொள்கை பற்றி அவர் பேசியுள்ளார். அது அவரின் தனிப்பட்ட விஷயமாக நான் பார்க்கிறேன். நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு இந்த மாநாட்டை நடத்தியுள்ளார்கள். அவர்கள் கட்சியை பொறுத்தவரை அதை வெற்றியாக தான் அவர்கள் கருதுவார்கள்.
விஜய்யுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. இணைவோமா, இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும், விஜயகாந்த் நடத்திய மாநாட்டை விட தவெக மாநாட்டிற்கு அதிக கூட்டம் குறித்த கேள்விக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து தான் கட்சி ஆரம்பித்தார். எப்படி மாநாடு நடத்தினார் என அனைவருக்கும் தெரியும் அந்த நிகழ்வுகள் இன்னும் என் ஆழ்மனதில் உள்ளது. குறைந்தது 25 முதல் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். சாலையில் ஓடுகின்ற வாகனமே குலுங்கும் அளவிற்கு மக்கள் வெள்ளம் இருந்தது. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்திருந்தன. ஒரு உயிர் பலி கூட இல்லாமல் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என ராணுவ கட்டுப்பாட்டுடன் கேப்டன் மற்றும் அவரது தொண்டர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அவர் அளவிற்கு யாரும் மாநாடு நடத்த முடியாது என பெருமையுடன் சொல்கிறோம்.
2026ல் திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும் என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, அது அவர்களின் நம்பிக்கை. அதை முறியடிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. எது வலுவாக உள்ளது என தேர்தலை ஒட்டி பார்ப்பீர்கள்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அது வரவேற்கத்தக்கது. உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சியில் இருக்கும்போது, அதை சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல நாங்களும் அதை முன் வைக்கிறோம்.
அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, அனைவரும் ஒன்றிணைந்தால் நல்லது தான் ஆனால், அது அவர்கள் கட்சி விவகாரத்தில் நாங்கள் சொல்ல முடியாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வழக்கு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அடுத்த விசாரணை தேதி வரும்போது அது குறித்து சொல்கிறேன் எனக் கூறினார்.
What's Your Reaction?