காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?
திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில், இது தேசிய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திமுக கட்சியின் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, அதன் மூலம் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய அளவில் திமுக புதிய அரசியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
திமுகவை எப்படியாவது மீண்டும் வலுப்படுத்துவதில் கட்சித் தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில், முதற்கட்டமாக 78 மாவட்டச் செயலாளர்கள் என்ற எண்ணிக்கையை விரிவுபடுத்தி 110 ஆக உயர்த்தியது. இதனுடன் பல்வேறு புதிய விதிமுறைகளையும் திமுக தலைமை கொண்டு வந்தது.
அடுத்ததாக, காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இவ்வாறு கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு நேற்று முன்தினம்(12.09.2026) சென்றார்.
இல்லத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.யை, உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்தச் சந்திப்பின்போது, உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனில் தேசாய் மற்றும் மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும், அது தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம், வரவிருக்கும் அரசியல் சவால்களில் அவற்றின் பங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும், லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார்.
‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டிருப்பதற்கான அச்சாரமாகவே இந்தச் சந்திப்புகள் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்தும், அதற்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்துள்ளார். மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது. ஆனால், திமுக அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது.
இதேபோல், மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேவுக்கு கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியாக மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் கனிமொழி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும், மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தேசிய அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் திட்டப்படி அரசியல் களத்தில் மூன்றாவது அணி உருவானால், காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஆட்சியில் உள்ள விஜய் அரசுக்கும் இது தடங்கலாக அமையுமா? என்ற பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
வருகிற 2029 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை டார்கெட் செய்து திமுக பிரம்மாண்ட 3வது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருகின்றன என்றும் பேசப்படுகிறது.
What's Your Reaction?