RATHAVETTAI EPISODE 1 : ஜெய்சங்கரின் கொடூர கிரைம் டைரி!

ரத்தவேட்டை பாகம் 1: தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை அதிர வைத்த சீரியல் கில்லர் ஜெய்சங்கரின் கொடூர குற்றங்கள், போலீஸ் விசாரணை மற்றும் அதிர்ச்சி பின்னணி !

Sep 12, 2026 - 19:00
RATHAVETTAI EPISODE 1 : ஜெய்சங்கரின் கொடூர கிரைம் டைரி!
RATHAVETTAI EPISODE 1: Jayshankar Killer Case

கொலையாளிகள் எங்கும் இருக்கலாம்! தனித்த அடையாளங்களோடு பெரும்பாலும் அவர்கள் திரிவதில்லை. தியேட்டரில் பக்கத்து சீட்டில், ஹாஸ்பிடலின் கேன்டீன் க்யூவில், செல்ஃபி எடுக்க முயலும் உங்கள் மொபைல் ஃப்ரேமுக்குள்... என்று ரத்தம் பார்த்த முகங்கள் மிக இயல்பாகத்தான் வலம் வரும். ஆனால், நம் முதுகுத்தண்டு சில்லிடும் வகையிலான குரூரங்களை செய்து முடித்திருப்பார்கள். அவர்களில் சிலர் நம்மில் ஒருவராக வலம் வந்துகொண்டிருப்பார். சட்டத்தின் தூக்குக் கயிற்றில் சிலர் தொங்கியிருப்பர், பழிக்குப் பழியாக அருவா பாய்ந்து முடிந்திருப்பர். குற்றத்தின் உச்சம் தொட்ட இவர்களின் பகீர் அணிவகுப்புதான் இந்த தொடர்...

"ரத்தம், சாவுன்னா ஒரு ஈர்ப்பு! வெறி. இது இன்னைக்கு நேத்தைக்கு ஆரம்பிச்சது இல்ல சின்ன வயசுல இருந்தே நடக்குற விளையாட்டு. மூச்சு முட்ட முட்ட ரத்த வாசமும் பொண்ணுங்க வாடையும் இல்லாம என்னால வாழவே முடியாது -கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் கில்லர் ரேப்பிஸ்ட் பேசும் இந்த டயலாக்தான் ஜெய்சங்கர் எனும் நிஜ கிரிமினலின் வாழ்க்கையே.

2010களில் பெங்களூரு - கோவை -கொச்சின் பைபாஸின் தமிழக ஏரியாவில் பஞ்சாபி தாபாக்கள் அதிகம். நேஷனல் ஹைவேஸில் நெஞ்சாங்கூடு அடைக்க அடைக்க ராட்சஸ லாரி ஓட்டும் டிரைவர்களின் ரிலாக்ஸ் மையங்கள் இவைதான். வரமிளகாய் தூக்கலா போட்ட பள்ளிப்பாளையம் சிக்கனை கடித்தபடி ரெண்டு குவார்ட்டரை உள்ளே இறக்கினார்களென்றால் மொத்த உடம்பும் தினவெடுத்து நிற்கும். எகிறிய சூட்டைக் குறைப்பதற்கென்றே சுற்றுவட்டார புளியமரங்களின் கீழே நிற்பார்கள் பவுடர் தூக்கலான பச்சைக் கிளிகள்.

பணத்துக்காக உடம்பை மட்டுமல்ல வாழ்க்கையையே பணயம் வைக்கும் இவர்களில் சிலர் திடீரென பிணமாகக் கிடப்பதுண்டு. பவானி புறநகரில் தாபா ஒன்றின் அருகே புதரில் கழுத்து அறுபட்டு கிடந்தார் ஒரு பெண். இறுதி வாக்குமூலத்தில் அவர் விளக்கியபடி பார்த்தால் முழுக்க முழுக்க ரத்தம் மற்றும் அசாதாரணமான காம வெறியில் ஊறிப்போன ஒருவனின் செயல்தான் என்பது தெளிவாக விளங்கியது. விசாரணையில் அப்படியே நூல் பிடித்துப் போன போலீஸ் நின்ற இடம்தான் சேலம் மாவட்டம் கன்னியாம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த டிரைவர் ஜெய்சங்கர்தான் கொலையாளி எனும் உறுதியான முடிவுக்கு வந்த போலீஸ், அவனது க்ரைம் டைரியை புரட்டியபோது அதிர்ச்சியில் உறைந்து போனது.

ஜெய்சங்கரின் கர்ண கொடூர காமக் கொலை விவரங்களை அறிந்த ரிட்டயர்டு போலீஸ் அதிகாரிகள் சிலரை சந்தித்துப் பேசியபோது அவர்கள் விளக்கியவை கிறுகிறுக்க வைக்கின்றன... சாதாரண குடும்பத்தில் பிறந்து நார்மலாக வளர்ந்து பள்ளிப் பருவத்தில் சேர்க்கை சரியில்லாமல் தடம் மாறியிருக்கிறான் ஜெய்சங்கர். பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு பம்ப் செட்களில் பெண்கள் குளிப்பதை பார்ப்பதற்காகவே அக்கம்பக்க மரங்களில் ஏறி பல மணி நேரம் மறைந்து உட்கார்வது வழக்கமாகி இருக்கிறது. கண்ணால் பார்த்து ஏங்கியதை கையால் தொட முயல, துவக்கத்தில் தர்ம அடி விழுந்திருக்கிறது. தனியாக வந்தாலுமேகூட இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களிடம் வாலாட்டுவது கஷ்டம் எனும் முடிவுக்கு வந்து 45, 50க்கு மேல் எத்தனை வயதான பெண்களையும் டார்கெட் பண்ணி சாய்ப்பதை வழக்கமாக்கி இருக்கிறான்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகளில் ஒத்த சத்தையாக இருக்கும் பெண்கள், காட்டுப்பக்கம் ஆடுமாடு போய்க்கும் பெண்கள், சுள்ளி பொறுக்கிவிட்டு வரும் பெண்கள் என்று தனியாக சிக்குவோரை வாயைப்பொத்தி இழுத்துச் சென்று மிக மூர்க்கத்தனமாக பாலியல் வன்புணர்வு செய்வது அதன் பின் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொல்வது என்று கோர தாண்டவமாடத் துவங்கியிருக்கிறான்.

காம வெறி ஏறிவிட்டால் உக்கிரமான மிருகமாக மாறிவிடும் ஜெய்சங்கரின் மூர்க்கத்தனத்தின் முன் பாவம் பெண்கள் கிழித்துப் போட்ட இலையாகிவிடுவார்கள். ஆனால், சில வேளைகளில் தனது தாக்குதலையும் தாண்டி சத்தமிடும் பெண்களை முதலில் கழுத்தை அறுத்து முனக வைத்துவிட்டு அதன் பின் வேட்டையாடியிருக்கிறான்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல எத்தனையோ கொலை கிரிமினல்ஸை விசாரிச்சிருக்கேன். ஆனா ஜெய்சங்கரை மாதிரி ஒரு ப்ரூட்டல் ரேப்பிஸ்ட்டை நான் கற்பனை கூட பண்ணியதில்லைங்க.

நாடி, நரம்பு, சதையெல்லாம் செக்ஸ் வெறி கொதிக்கிற ஒரு விநோத பிறவி அவன். பலவந்தப்படுத்துறதுக்குன்னே கிளம்பி கிராமம், கிராமமா, அவுட்டர் ஏரியாக்களா அலைவான். வயதான பெண்கள் மெயின் டார்கெட்னாலுமே கூட சில நேரங்கள்ல பின்னாடி இருந்து குத்தி இளம் மற்றும் புதுசா திருமணமான பொண்ணுங்களையும் வீழ்த்தி எல்லாத்தையும் முடிச்சிருக்கிறான். தமிழகம், கர்நாடகம் என இரண்டு மாநிலங்களில் செய்த மொத்த கொலைகள் 12 பாலியல் பலாத்காரங்கள் 33 மற்றும் செலவுக்காக சில பெண்களிடம் மட்டும் நகை திருட்டு செய்துள்ளான்.

கீழே விழுந்த பெண்களோட சேலை, துப்பட்டா, டாப்பை கழட்டி சுருட்டி பக்கத்துல வெச்சுட்டு அதுல எடுக்க வசதியா தன்னோட கத்தியை வைப்பானாம். இதை செய்றப்ப அவனோட இடது கால் அந்தப் பெண்ணோட கழுத்தில் அமுக்கிட்டிருக்கும். சீரழியப்போறோம்னு ஏற்கெனவே பதறிட்டிருக்கும் அந்தப் பெண், வெட்டுப்படவும் போறோம்னு நினைக்க எந்தளவுக்கு துடிச்சிருக்கும்.

வெளியுலகத்துக்கு தெரிஞ்ச அவளோட முதல் பலி பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சியாமளா. 44 வயசான அந்தப் பெண்ணை சீரழிச்சு கொன்னான். அப்புறம் சில மாசங்கள்லேயே மளமளன்னு நிறைய பலாத்தார கொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்கனை பண்ணிட்டான்.  இவனிடம் சிக்கி சீரழிஞ்சு செத்த பெண்களில் ஒரு லேடி போலீஸும் அடக்கம்னு சொன்னாள் நம்ப முடியுதா? ஒன்றரை வருஷ இடைவெளியில ஆறேழு ரேப்...  மர்டர் கேஸ்ல ரெண்டு தடவை அவன் என் விசாரணை வளையத்துக்குள் வந்தான்.

"ஏன்டா நீ சொல்றதை கேக்கவே பதறுதே இதை செய்றதுக்கு எப்படி உனக்கு மனசு வருதுன்னு கேட்டா, "பொம்பள வாசத்தோட ரத்த வாடையும் சேர்த்து அடிச்சாதான் எனக்கு வெறி அடங்குது. கம்முன்னு கெடன்னு" சொல்லிப் பார்ப்பேன், அடங்கலைன்னாதான் நான் டார்ச்சர் பண்ணி முடக்குவேன். செக்ஸ் புத்தி வந்துட்டாலே மனசு தறிகெட்டுடுது சார் வேனும்னா நான் பண்றேன்?ன்னு நக்கலா கேப்பான். அப்ப எங்களுக்கு வர்ற கோபத்துக்கு நாமளே கண்டந்துண்டமா வெட்டி தீர்ப்பு கொடுத்துடலாம்னு தோணும்' எனநரம்பு புடைத்தனர். 

தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மாவட்டங்களில் மட்டும் சுமார் 13 பாலியல் மற்றும் கொலை வழக்குகள் சில வருடங்களிலேயே ஜெய்சங்கர் மீது பதிவாகின. சேவத்தில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி கர்நாடகாவுக்குள் பதுங்கிய ஜெய்சங்கர் அங்கேயும் சுமார் ஆறு பெண்களை பாலியல் வன்புணர்வு, சித்திரவதை செய்து கொன்றதாக அம்மாநில போலீஸ் கொதித்தது.

இவனை கைது செய்ய சிறப்புப் படைகள் அமைத்து தேடியது. போலீஸிடம் சிக்காமல் ஊர் ஊராகச் சென்றபோதும்கூட ஆன் தி வேயில் சில கிராமங்களின் வெளிப்பகுதியில் பாலியல், கொலை என்று வேட்டையாடிக் கொண்டேதான் தப்பியிருக்கிறான். சித்ரதுர்கா பகுதியில் ஒரு கிராமப் பெண்ணை சாய்த்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அப்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்களால் அடித்து அமுக்கப்பட்டு போஸ்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.

27 ஆண்டு கடுங்காவல் தண்டனை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலடைப்பு, லஞ்ச வெறி பிடித்த சிறை ஊழியர் ஒருவரின் மூலம் கள்ளச்சாவி போட்டு செல்லை திறந்து தப்பிப்பு, மின்சாரம் பாயும் சுவரேறிக் குதிக்கையில் கால் உடைந்த நிலை, ஜெய்சங்கர் தப்பியதால் ஜெயிலர்கள் உள்ளிட்ட போலீஸ் டீம் சஸ்பெண்ட், 'காமவெறி கொலைகாரன் தப்பியுள்ளான் பெண்களே உஷார்' என கர்நாடக மாநில அரசின் ஓப்பன் அலர்ட் என்று ஜெய்சங்கரின் வெறி வாழ்க்கையில் ஷாக் ட்விஸ்ட்கள் அதிகம். 

சைக்கோ ரேப்பிஸ்ட் கில்லர் என எஸ்டாப்ளிஷ் ஆகியதால் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில காவல்துறையினருக்கு அலர்ட் விடுக்கப்பட்டது. ஒரு இன்ஃபார்மர் மூலம் மீண்டும் கர்நாடகா போலீஸிடம் சிக்கினான் ஜெய்சங்கர். இறுதியில் கேமரா பொருத்தப்பட்ட கைதியால் தொட முடியாத தூரத்தில் பூட்டு இருக்கக் கூடிய ஸ்பெஷல் செல்லில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், 2018 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் தனக்கு தாடியை ஷேவ் செய்ய வந்தவரிடம் இருந்து ஆட்டையைப் போட்ட பிளேடு மூலமாக தற்கொலை செய்துகொண்டான் ஜெய்சங்கர். 'செக்ஸ் வெறியில் பெண்களின் கழுத்தை அறுத்துக் கொன்றவன். இனி வாழ்வில் செக்ஸ் கிடைக்காது எனும் மன அழுத்தத்தில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு இறந்தான் என்று ஃபைலை க்ளோஸ் செய்தது போலீஸ்.

(ரத்தம் தெறிக்கும்...) - எஸ்.ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow