கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா‘பொங்கியெழு மனோகரா’... கண்ணாம்பாவின் கனல் தெறித்த வசனம்!
சிவாஜி கணேசன், பி.கண்ணாம்பா நடிப்பிலும் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களிலும் உருவான ‘மனோகரா’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத இடம்பிடித்தது அது குறித்த விரிவாக பார்போம்.
- வி.ராம்ஜி
ஒரு சினிமா, ஜெயிப்பது பெரிய விஷயமா? ஆனால், காலங்கள் கடந்தும் தலைமுறையைக் கடந்தும் பேசப்படுவது என்பதுதான் வரலாறு. இன்றைக்கு ‘பாகுபலி’, பொன்னியின் செல்வன்’ என்று படங்கள் வந்து நம்மை வியக்கவைத்தன. சரித்திரப் படங்கள் எடுப்பார்கள். சாதனை புரிவார்கள். சாதனை செய்வதையே சரித்திரமாக்கிய படங்களும் உண்டு. அப்படியான சரித்திரப் படம்... சாதனைகள் புரிந்து மாபெரும் சரித்திரமாக அமைந்தது. அந்தப் படம்தான் ‘மனோகரா’. கமல்ஹாசன் தன்னுடைய படத்துக்கு ‘பம்மல் கே சம்பந்தம்’ என தலைப்பு வைத்தார்.
எத்தனைபேருக்கு இதற்கான காரணம் தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் நாடக உலகின் மிகப்பெரிய முன்னோடிகளில், எழுத்துலகின் பிதாமகன்களில் பம்மல் சம்பந்த முதலியார் தனித்துவம் மிக்கவர். ‘மனோகரா’ திரைப்படம், பம்மல் சம்பந்த முதலியாரின் புகழ் மிக்க நாடகம் இது. இதற்கு திரைக்கதையும் வசனமும் எழுதினார் கலைஞர் கருணாநிதி. அப்படி கலைஞரின் பேனாவில் இருந்து தெறித்து விழுந்த வசனங்கள்தான், இன்று வரைக்கும் ‘மனோகரா’ படத்தை மறக்கமுடியாத படமாக்கியிருக்கின்றன.
சிவாஜி கணேசன், கிரிஜா, டி.ஆர்.ராஜகுமாரி, கண்ணாம்பா என பலரும் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என மரியாதையுடன் கொண்டாடப்படும் எல்.வி.பிரசாத். கமலின் ‘ராஜபார்வை’யில் வரும் மாதவியின் தாத்தா என்றால் இன்னும் சட்டென்று நமக்குப் புரிந்துவிடும். எல்.வி. பிரசாத் தயாரிப்பில்தான், கே.பாலசந்தரும் கமல்ஹாசனும் ‘ஏக் தூஜே கேலியே’ மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்கள். அங்கே பாலசந்தருக்குக் கிடைத்தவர்தான் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா!
நடிகர்களுக்கு விதம்விதமான கேரக்டர்கள் கிடைத்துவிடும். நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் தப்பித்தவறியேனும் நிகழ்ந்துவிடும். ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதென்பது எப்போதாவது பூக்கிற அத்தி. குறிஞ்சி. அந்த அதிசய அற்புதம் நிகழ்ந்தது. ’மனோகரா’வில், சிவாஜிக்கும் அவரின் அனல் தெறிக்கும் குரலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நம் நரம்புகளே புடைக்கும். சிவாஜிக்கு நிகராக, இன்னும் சொல்லப்போனால், சிவாஜியை விட பல படிகள் அதிகமாகவே இன்னொருவருக்கும் மிகப்பெரிய பேர் கிடைத்தது. அவர்தான் பி.கண்ணாம்பா!
‘அம்மா கேரக்டருக்கு இந்த அம்மாதான், பிரமாதமா இருப்பாங்க. இவங்க நடிக்கிறதால, இன்னும் பத்து பக்கத்துக்கு வசனத்தை தாராளமா எழுதலாம்’ என்று திரையுலகம், பி.கண்ணாம்பாவின் நடிப்பின் மீதும் அவரின் குரல்வளத்தின் மீதும் தமிழ் உச்சரிப்பின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பிரமிப்புமாக வைத்திருந்தது. இத்தனைக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவரின் தமிழைக் கொஞ்சம் கேட்டுப்பார்த்தால், கொஞ்சம் வெட்கித்தான் போவோம்.
எத்தனை பக்க வசனங்கள் என்றாலும் ஏற்ற இறக்கங்களுடன் பேசி கைதட்டல் வாங்குவார் சிவாஜி. கண்ணாம்பாவும் அப்படித்தான். ‘மனோகரா’ படத்தின் வசனங்களும் காட்சிகளும் அந்தக் காலத்தில் தெறிக்கவிட்டன. இந்தக் காட்சியில் சிவாஜி அப்ளாஸ் அள்ளியிருப்பார். அடுத்த காட்சியில் கண்ணாம்பா ஸ்கோர் செய்து தியேட்டரை நடுநடுங்க வைத்திருப்பார்.
ராணிக்கு துரோகம் செய்வார் மகாராஜா. இன்னொரு பெண்ணுடன் பழகுவார். பிறகு அழகிலும் வலையிலும் விழுந்துவிடுவார். ராணியை துரத்திவிடுவார். கூடவே மகனும் அல்லாடுவார். அந்தப் பெண் சூழ்ச்சியால் மொத்த தேசத்தையும் தன் கைக்குள் கொண்டு வரத் திட்டமிடுவார். காமத்தால் விழுந்த அப்பாவைக் கண்டும் அவரால் வேதனைக்குள்ளாகும் தேசமக்களைக்கண்டும் கலங்குவார் மனோகரன். அவர் ஒவ்வொரு தருணத்திலும் ஆவேசமாவார். மகனை தன் வார்த்தையால், விரிந்து பார்க்கிற விழியால், சொல்லால் கட்டிப்போட்டு, அடக்கிவைப்பார்.
ஒருகட்டத்தில், ஆத்திரத்தை சிவாஜியால் அடக்கமுடியாது. அவ்வளவு ஏன்... கண்ணாம்பாவாலும் பொறுத்துக்கொள்ளமுடியாது. அப்போது கண்ணாம்பா சொல்லும் வசனம்தான் இன்று வரைக்கும் பிரபலம். அந்த வசனம்... ‘பொறுத்தது போதும் மனோகரா, பொங்கியெழு’. ‘கண்ணாம்பா அளவுக்கு அனல் பறக்கும் வசனங்களை எவரும் பேசவே முடியாதுப்பா’ என்று நரம்பு புடைக்கக் கரவொலி எழுப்பியும் உரக்கக் குரல் கொடுத்தும் கொண்டாடினார்கள். தமிழ்ப் பாடலை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு பாடுவது போல, கண்ணாம்பா, தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து பேசினார் என்று சொன்னால் அந்த கேமிராக்கள் கூட நம்பாது!
நாடகமாக இருந்த ‘மனோகரா’, திரைவடிவத்துக்கு மாறியதுதான் தமிழ்சினிமாவின் மலர்ச்சி; வளர்ச்சி. நகைச்சுவை ஒருபக்கம், நக்கல் இன்னொரு பக்கம், கோபம் ஒருபக்கம், ஆவேசம் மற்றொரு பக்கம் என கலைஞரின் பேனா கதகளி ஆடியிருக்கும். குறும்பு, குசும்பு, காதல்ரசம், பகடி, ஆவேசம் என சகலமும் கொண்ட சரித்திரப்பேனாக்காரர் கலைஞர்! இயக்குநர் எல்.வி.பிரசாத்தின் அற்புத இயக்கம் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்..
பாடல்களும் இசையும் அமர்க்களம். கருப்பு வெள்ளையில் காவியம் படைத்தார் எல்.வி.பிரசாத். பின்னர் ‘இருவர் உள்ளம்’ மாதிரியான படங்களையும் இயக்கினார். ‘மனோகரா’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியது. வசனங்களும் சிவாஜியின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றிகரமாக ஓடின.
1952ம் ஆண்டு சிவாஜி, கலைஞர் கூட்டணியில் வெளியான ‘பராசக்தி’ எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ.... அதைவிட பல மடங்கு கரவொலியையும் வசூலையும் அள்ளிய ‘மனோகரா’, 1954ம் ஆண்டு வெளியானது. 72 வருடங்களாகியும் இன்றைய தலைமுறையினரும் ‘பொறுத்தது போதும் மனோகரா, பொங்கியெழு’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!
What's Your Reaction?