பாஜகவை கழற்றிவிட எடப்பாடி முடிவா? ‘டெல்லியை நம்பி இனி பயனில்லை’ – அதிமுகவில் பரபரப்பு!

அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், டெல்லி மீதான நம்பிக்கையை அதிமுக தலைமை இழந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Sep 10, 2026 - 20:30
Sep 10, 2026 - 18:14
பாஜகவை கழற்றிவிட எடப்பாடி முடிவா? ‘டெல்லியை நம்பி இனி பயனில்லை’ – அதிமுகவில் பரபரப்பு!

தமிழக அரசியல்வாதிகளிலேயே ஸ்டாலினை விடவும் அதிகம் விரக்தியில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள். உட்கட்சி மோதல்கள் தொடங்கி கட்சியின் நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு தாவுவது வரை அவரால் எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமையிடம் பலமுறை உதவி கேட்டும், அக்கட்சி திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதையடுத்து, 'பலனில்லாத பா.ஜ.க.வை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும், கழற்றிவிட்டால்தான் என்ன?' என்கிற மனநிலைக்கு எடப்பாடி வந்துவிட்டதுதான் எம்.ஜி.ஆர். மாளிகையின் அடுத்தகட்ட அப்டேட்!

இதுகுறித்து அதிமுக உட்கட்சி விவகாரங்களை அறிந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடிக்கு விருப்பம் இல்லாமல்தான், அவருக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து, அதி.மு.க.வை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டுவந்தது பா.ஜ.க. என்று சொல்லப்படுகிறது. வேண்டாவெறுப்பாக கூட்டணி அமைத்த எடப்பாடி, பாஜக கேட்ட தொகுதிகளை தராமல், தோற்கும் தொகுதிகளை தள்ளிவிட்டார். அதன் விளைவாக, நான்கு எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பா.ஜ.க. இன்று ஓர் இடத்தில் சுருங்கிவிட்டது.

மேலும், தி.மு.க. மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியால் எப்படியும் 2026ல் வெற்றிபெற்றுவிடுவோம். இல்லையேல் எதிர்க்கட்சியாகவாவது இருப்போம் என கணக்குப்போட்டார் எடப்பாடி ஆனால், அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது தேர்தல் முடிவு அதிமுக மூன்றாம் இடத்துக்கு தூக்கி வீசப்பட்டதால் உடைந்துபோய்விட்டார் எடப்பாடி இதையடுத்து, எடப்பாடி மீதான நம்பிக்கையை இழந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் நகர்ந்துவருகின்றனர்.

ஆறு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவுக்கு தாவிவிட்டனர். இதுபோதாதென்று, 25 அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஆதரவுபெற்று எடப்பாடிக்கு உச்சபட்ச ஷாக் கொடுத்தது தவெக அதன்பிறகு அதில் சில எம்.எல்.ஏக்கள் தாய் கழகத்திடமே சரண்டராகிவிட்டார்கள் என்றாலும், ஆறு எம்.எல்.ஏ.க்களை நிரந்தமாக பறிகொடுத்ததை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, 'இந்த நிலைக்கு எல்லாம் காரணமான, தவெகவை இனியும் சும்மா விடக்கூடாது. டெல்லி மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்' என முடிவெடுத்தார் எடப்பாடி அதற்காக ஆளுநரிடம் குதிரை பேரம் புகார், நீதிமன்றத்தில் வழக்கு ஆகிய முயற்சிகளை செய்தபடியே டெல்லி மூலம் பவர் பாலிடிக்ஸ் செய்ய நினைத்தார்.

ஆனால் டெல்லியோ வேறு விதமாக யோசிக்கத் தொடங்கியது. அதாவது டி.டி.வி. தினகரன் முன்பு எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டபோது, 'அதிமுகவின் பலம் என்ன, அக்கட்சியில் எடப்பாடிக்கான அதிகாரம் என்ன, தொடர் தோல்விகளால் தொண்டர்கள் எடப்பாடியை எப்படி பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் டெல்லிக்கு படம்போட்டு காட்டியிருக்கிறார்.

தவிர, தேர்தல் தோல்விக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி, வெளிப்படையாக டெல்லிக்கு கொடுத்த தகவல்களிலும் 4.டி.வி.தினகரன் சொன்னதெல்லாம் மேலும் ஊர்ஜிதமாகவே, எடப்பாடியின் பலத்தை எடைபோட்டு பார்த்திருக்கிறது டெல்லி. குறிப்பாக, தொகுதி மறுவரையறை நடந்தாள் தமிழ்நாட்டுக்கு 59 மக்களவைத் தொகுதிகள், 351 சட்டமன்றத் தொகுதிகள் வரை கிடைக்கும். அதை சமாளிப்பதற்கான நெட்வொர்க் எடப்பாடியிடம் இல்லை. தன் அதிகாரத்துக்காக பல முக்கியப் புள்ளிகளை துரத்திவிட்டு நிற்கிறார். இது எதிர்காலத்திற்கு சரிப்படாது என டெல்லி பாஜக கணித்திருக்கிறது. அதனால்தான் எடப்பாடியை புறக்கணிக்கத் தொடங்கியது.

இதுபற்றியெல்லாம் மத்திய அமைச்சர் அமித் ஷாவையே நேரடியாக சந்தித்துப் புகார் கொடுக்க எடப்பாடி நேரம் கேட்டபோதும், இதுவரை நேரம் தரவில்லை. சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்த அந்த குறுகிய நேர சந்திப்பிலும் 'கட்சியை ஒன்றிணைக்கும் வேலையைப் பாருங்கள் என்ற கண்டிப்பு மட்டும்தான் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான், 'டெல்லியை நம்பி இனி பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எடப்பாடி. 

இந்த முடிவுக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. எடப்பாடி இனி நமக்கு சரிப்படமாட்டார் என்ற முடிவுக்கு வந்த டெல்லி, திமுகவுடன் சுமூக உறவை கடைபிடிக்க முயற்சிக்கிறது. ஒருவேளை அந்த உறவு, தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியாகவும் உருமாற்றம் அடையலாம். அப்படி நடந்தால், அவர்களால் நாம் தூக்கி எறியப்பட்டதாக ஆகிவிடுவோம். அவர்கள் நம்மை விலக்குவதற்கு முன்பாக நாம் அவர்களை விலக்கிவிடுவோம் எனவும் எடப்பாடி நினைக்கிறார்.

இதன் மூலம் கவுரவம் காக்கப்படுவதோடு, அரசியல் ஆதாயமும் இருப்பதாக நினைக்கிறார் எடப்பாடி. அதாவது, மதச்சார்பற்ற கூட்டணி என்று சொல்லித்தான் தி.மு.க. இதுவரை வெற்றிபெற்றுவந்தது. இப்போது, அதற்கு போட்டியாக தவெக வந்துவிட்டது. இப்போது பா.ஜ.க.வை நாம் கழற்றிவிட்டால், நம்மையும் மக்களிடத்தில் மதச்சார்பற்ற சக்தி என முன்னிறுத்த முடியும்.

அதன்மூலம், சிறுபான்மையினர் வாக்குகளை கவரமுடியும் அது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு சாதகமாக அமையும்' என நினைக்கிறார் எடப்பாடி அதனால்தான். கடந்த செப்டம்பர் கரன் 6ம் தேதி எம்ஜி ஆர், மாளிகையில் மா.செ. க்கள் கூட்டத்தை நடத்திய எடப்பாடி, பாஜக கூட்டணியில் தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மேலும், தேசிய கட்சி சப்போர்ட் இல்லையே என பார்க்க வேண்டாம் பிரதமர் வேட்பாளர் பிரச்னையில் த.வெகவை விட்டு காங்கிரஸ் வந்தால், அவர்களை நாம் பிடித்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் பகிர்ந்திருக்கிறார்" என சொல்லி முடித்தார்.

இதுகுறித்து அதிமு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் கேட்டோம். "எப்போதும் தேர்தலுக்காக மட்டும்தான் கூட்டணி. அதை தேர்தல் உடன்பாடு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் தேர்தல் முடிந்ததும் அந்தக் கூட்டணியும் முடிவுக்கு வந்துவிடும். எந்த கூட்டணியும் நிலைத்தது கிடையாது. வரவிருக்கும் தேர்தலுக்கு எது சாதகம், பாதகம் என மூத்த நிர்வாகிகளோடு எங்கள் பொதுச்செயலாளர் கலந்துபேசுவார். யாராலும் உடைக்கவே முடியாது என்று சொன்ன தி.மு.க. கூட்டணி. ஒரே இரவில் என்னவானது என எல்லோருக்கும் தெரியும் என்றார்.

யார் மனசுல யாரு?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow