பிப்.25-ல் தமிழகம் வரும் பிரதமர்... தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?
வருகின்ற 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அவர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர், இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
வரும் 25ஆம் தேதி சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத பிரதமர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.118.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 5 அவசர கால சிகிச்சை மையங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல் கோவையில் ரூ.4.63 கோடி மதிப்பில் உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் உணவு ஆய்வுக் கூடத்தையும், ஆவடியில் ரூ. 7.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய மத்திய அரசின் சுகாதாரத் திட்ட நலவாழ்வு மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டு காசநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆதரவில் ரூ.151.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையம், ஆய்வகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
What's Your Reaction?