’லாபடா குடியரசு துணைத் தலைவர்’.. எங்கே இருக்கிறார் தன்கர்? கபில் சிபல் எழுப்பும் கேள்வி

”ராஜினாமா செய்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை; காவல்துறையில் இதுத்தொடர்பாக புகாரளிக்கப் போகிறேன்” என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பியுமான கபில் சிபல் பேட்டியளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’லாபடா குடியரசு துணைத் தலைவர்’.. எங்கே இருக்கிறார் தன்கர்? கபில் சிபல் எழுப்பும் கேள்வி
kapil sibal expresses concern as former vice president jagdeep dhankhar remains incommunicado

துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21, 2025 அன்று ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2022 ஆகஸ்ட் 11 அன்று இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, மாநிலங்களவையின் தலைவராகவும் (ex-officio Chairman) செயல்பட்டார்.

ஜெகதீப் தன்கர், 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக 1989 முதல் 1991 வரை மக்களவை உறுப்பினராகவும், 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே, ஜெகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா முடிவினை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியது. 

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பரபரப்பான பேட்டியொன்றினை அளித்துள்ளார். அதில், “ஜூலை 21 அன்று குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். இன்று ஆகஸ்ட் 9, அவர் இருக்கும் இடம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. ’லாபடா லேடீஸ்’ (லாபடா- காணாமல் போன) திரைப்படம் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். இப்போது தான் முதல் முறையாக ’லாபடா துணை ஜனாதிபதி’ பற்றி கேள்விப்படுகிறேன்” என்றார்.

மேலும், “தன்கர் துணை ஜனாதிபதியாக இருந்த போது அரசாங்கத்தை பாதுகாத்து வந்தார். இப்போது எதிர்கட்சி அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் என்ன செய்வது? ஆட்கொணர்வு மனு அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

“முன்னதாக ஒரு உறுப்பினர் தன்கரை அழைக்க முயன்றுள்ளார். அப்போது அவரின் உதவியாளர் அழைப்பை எடுத்து ‘அவர் ஓய்வெடுக்கிறார்’ என பதிலளித்துள்ளார். இதன் பிறகு யாரும் தொலைபேசியில் பதிலளிக்கவில்லை.பல அரசியல் கட்சி தலைவர்களும் இதே தான் சொல்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவரின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்” எனவும் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவராக இருந்தவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமா முடிவினைத் தொடர்ந்து, இந்தியாவின் 17-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவானது செப்டம்பர் 09 ஆம் தேதி நடைப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow