மகா சங்கடஹர சதுர்த்தி முதல் விநாயக சதுர்த்தி வரை... செய்ய வேண்டிய வழிபாடுகள்!
மகா சங்கடஹர சதுர்த்தி முதல் விநாயக சதுர்த்தி வரை விநாயகரை வழிபடும் முறைகள், செய்ய வேண்டிய பூஜைகள், விரதங்கள், நைவேத்தியங்கள் மற்றும் தான தர்மங்களின் சிறப்புகள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு காரியத்துக்காக எழுதத் தொடங்கும்போதும் உச்சியில் பிள்ளையார்சுழி போட்டுத்தான் தொடங்குவோம். மிகப்பிரமாண்டமாக கோயில்களில் நடைபெறும் விழாவாக இருந்தாலும் கும்பாபிஷேகமாக அமைந்தாலும் விநாயகப்பெருமானுக்கு உரிய ஹோம நியமங்களை அனுஷ்டிப்பது சடங்கு, சம்பிரதாயம், ஆகமம்! நம் வீட்டில் நடக்கிற சிறியதொரு பூஜையில் கூட முதல் வணக்கத்துக்கு உரியவராகத் திகழ்பவர் ஆனைமுகத்தானே..! அவரை இன்னும் இன்னுமாகக் கொண்டாடுகிற பண்டிகைதான் விநாயக சதுர்த்தி.
சதுர் என்றால் நான்கு. சதுர்முகம் என்றால் நான்முகங்களைக் கொண்டவன். சதுர்த்தி என்பது நான்காம் நாள். அதாவது பெளர்ணமிக்கு அடுத்த நான்காம்நாள். அமாவாசைக்கு அடுத்த நான்காம்நாள். இதில் பெளர்ணமிக்கு அடுத்து வருகிற நாளை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். இது மாதந்தோறும் வருகிற விரத நாள்.அதேபோல், ஆவணி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வருகிற நாலாவது நாள், விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு தத்துவங்களுக்கு உள்ளேயும் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதும் அமைதிக்கு உள்ளாக்குவதுமான விஷயங்கள் அடர்ந்திருக்கின்றன. அதேபோல் அப்போது நாம் வைக்கிற நைவேத்தியங்களும் மகிமை மிக்கவை. மகத்துவம் கொண்டவை.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் 14ம் தேதி பிள்ளையார் சதுர்த்தி. துதிக்கை நாயகனை நம்பிக்கையுடன் ஆராதித்து, ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்கிற வைபவம். அதற்கு முன்னதாக வருகிற சதுர்த்தி நாளை மகா சங்கடஹர சதுர்த்தி என வழிபடுகிறோம். ஆகஸ்ட் 31ம் தேதி திங்கட்கிழமை.
மகா சங்கடஹர சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி வருகிற ஒவ்வொரு நாளும் விரதநாள் என்கின்றன ஞானநூல்கள். தினமும் சாப்பிடாமல் விரதம் மேற்கொண்டு பிறகு கணபதிபெருமானை தரிசித்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சரி... மகா சங்கடஹர சதுர்த்திக்கும் விநாயக சதுர்த்திக்கும் நடுவே உள்ள நாட்களில் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம். பிள்ளையார் சந்நிதிக்குச் சென்று 11 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை தோப்புக்கரணமிட்டு வழிபாடு செய்யலாம். கணங்களுக்கு அதிபதி கணபதி. எனவே நம் ஒவ்வொரு பொழுதையும் ஒவ்வொரு செயலையும் கூர்மையாக்கி, புத்திசாதுர்யத்தைத் தந்து வெற்றி பெறச்செய்பவன் பிள்ளையாரப்பன்!
தினமும் ஒரேயொருக்காவது உணவு தானம் செய்யலாம். ஒரு தயிர்சாதப் பொட்டலம் தந்தாலே குளிர்ந்து அருளுவான் ஆனைமுகத்தான். அருகம்புல் மாலை சமர்ப்பிக்கலாம். வெள்ளெருக்கம்பூ கொண்டு மாலை கோர்த்து சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.
பூஜையறையில், ஒரு பித்தளைத்தட்டை சுத்தம் செய்து, அதில் மஞ்சள் பிடித்து வைக்கலாம். மனதார வேண்டி மஞ்சள் பிடித்து வைத்தால், அந்த மஞ்சளிலும் பிள்ளையார் உட்கார்ந்துகொள்வார். மண்ணிலும் கூட அவரின் அருட்கடாட்சம் நிறைந்திருக்கும். மஞ்சள் பிள்ளையாருக்கு தினமும் கைப்பிடி பச்சரிசி வைத்து, இரண்டு வாழைப்பழம் கொண்டு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பச்சரிசியை எறும்புகள் இருக்குமிடத்தில் வைக்கலாம். பழங்களை பசியுடன் இருக்கும் முதியவர்களுக்குக் கொடுக்கலாம்.
நம் எல்லா வழிபாடுக்குள்ளேயும் தான தர்மங்களே சொல்லிவைக்கப்பட்டிருக்கின்றன. அப்படித்தான் நம் முன்னோர்களும் பின்பற்றி வணங்கி வழிபட்டு வந்தார்கள். மகா சங்கடஹர சதுர்த்தியில் இருந்து விநாயக சதுர்த்தி நாள் வருகிற இந்தக் காலகட்டத்தில், ஆனைமுகனை மனமொருமித்து வேண்டுவோம். அகிலத்தையே காக்கும் ஐந்துகரத்தான், நம்மையும் காத்தருளுவான்!
வி.ராம்ஜி
What's Your Reaction?