COMBACK இளையராஜாவா? டிரெண்டிங்கில் கலக்கும் ‘டோரத்தி’ பாடல்கள்!

‘டோரத்தி’ பாடல்கள் மூலம் இளையராஜாவின் இசை மீண்டும் Gen Z தலைமுறையிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அவரது இசைக்கு வயதில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.

Aug 31, 2026 - 17:06
Aug 31, 2026 - 17:45
COMBACK இளையராஜாவா? டிரெண்டிங்கில் கலக்கும் ‘டோரத்தி’ பாடல்கள்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரத்தி’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி, இப்போது அந்தப் பாடல்கள்தான் பட்டிதொட்டிசிட்டி என ரவுண்டுகட்டி வலம் வருகின்றன. ஜென் ஸி இளைஞர்களிடம், இந்தப் பாடல்கள் புத்துணர்வை, இனம்புரியாத உள் அமைதியைத் தந்திருக்கின்றன. இந்த இசைக்குச் சொந்தக்காரர் இளையராஜா.

’கல்யாண விருந்து’ எனும் பாடல் இந்தக் காலத்து இளசுகளுக்கு இசைஞானி படைத்த தஞ்சாவூர் தலைவாழை விருந்து என்பதில் மாற்றமேதுமில்லை. இதனைத் தொடர்ந்து, வெளியான, முத்துமணி பாடலில் தேவதையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தேவதூது போல் குரலைக்குழைத்துக் கொடுத்த ஸ்வேதா மோகனின் குரல், ‘வாடி மீனாட்சி....’ என்று உச்சஸ்தாயி எடுக்கும் ராஜாவின் அந்த ஆன்மிகக்குரல் என ‘டோரத்தி’க்கு உயிரூட்டியிருக்கிறார் இளையராஜா.

‘நான்பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு படத்தை எடுத்துட்டு வந்து ராஜாகிட்ட குடுத்துருவேன். அவன் அந்தக் காட்சிக்கெல்லாம் உயிர் குடுத்திருவான்’ என்று மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்குநர் இமயம் பாரதிராஜா, நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார்.

ஜென் ஸி காலம் என்பதால், ‘பாட்டு வைரல்’ என்கிறார்கள். ‘வியூஸ் அள்ளுது’ என்கிறார்கள். ‘ஷேர்’ செய்கிறார்கள். ‘டிரெண்டிங்ல இருக்கு’ என்று ஹேஷ்டேக் தட்டுகிறார்கள். முக்கியமாக ‘கம் பேக்’ இளையராஜா என்கிறார்கள். மீண்டும் இளையராஜா லைம்லைட்டுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

நம்மூரில் அருவி இருக்கலாம். கடல் இருக்கலாம். ஆறுகுளம் இருக்கலாம். நாம் அருவியில் குளிக்காததாலோ, கடலில் கால் நனைக்காததாலோ, ஆறுகுளத்தில் முங்கி எழுகிற செயலைச் செய்யாமல் இருப்பதாலோ, அருவியை, கடலினை, ஆறுகுளங்களை இல்லை என்று சொல்லமுடியுமா? இளையராஜாவிடம் சரக்கு தீர்ந்துவிட்டதென முடிவு செய்துவிட்டால் எப்படி? சான்ஸ் இல்லை என்று வீட்டிலேயே முடங்கிவிட்டதாக நாம் நினைத்தால் எவ்விதம்? இளையராஜா எனும் இசையருவி, கரைதொட்டுக்கொண்டே இருக்கிற ஓயாத கடல் அலை. வற்றாத ஜீவநதி. திருவாசகம் பாடுவார். ரமணமாலை சூட்டுவார். சிம்பொனி அமைப்பார்.

1976ம் ஆண்டு இளையராஜாவாக உருமாறிய காலந்தொட்டு, இதோ... இந்த 2026 வரையிலும் கூட, இளையராஜா லீவு போடாமல் ‘என் கடன் பணி செய்துகிடப்பதே’ என்று செயலாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்.

என் இளம்பருவத்தில், டீக்கடையில், மியூஸிக் செண்டர்களில், பாடலை ஒலிபரப்புவார்கள். முதன்முதலாக அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே, ‘இது இளையராஜா மியூஸிக்கா, என்ன படம்’ என்று பந்தயம் கட்டாமலேயே ஜெயித்த பயபுள்ளைகள் நாங்கள். ராஜாவின் இசை என்பது தனித்துவம் கொண்டது. ஒவ்வொரு வாத்திய ஓசைகளையும் கேட்டால், ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடனும் பேசிக்கொள்வதை உணரலாம்.

இப்போது நமக்குப் பிடித்த நடிகரின் படமோ, இயக்குநரின் படமோ, இசையமைப்பாளரின் பாடலோ வந்துவிட்டால், அதை டிரெண்டிங்கிற்கு கொண்டுவருகிறோம். ஹேஷ்டேக் எனும் நான்குகோடுகளின் ஊடாக, வலைதளங்களில் ஊடுருவவைக்கிறோம். எண்பதுகளில் இளையராஜா பாடல்களும் எட்டுத்திக்கும் ஹிட்டடித்தன. அதற்குக்காரணம் டீக்கடைக்கார அண்ணன்களுக்கும் டெய்லர் கடை மாமாக்களுக்கும் ராஜாவின் இசைதான் பூஸ்ட். மியூஸிக் செண்டர் வைத்திருந்தவர்களுக்கு ராஜாவின் பாட்டு, செவிக்கு உணவும் போட்டது; வயிற்றுப்பசிக்கு தொழிலாகவும் ஆனது. எங்கள் வீட்டுத்தெருவில் பல அக்காக்களை ரேடியோவும் கையுமாகப் பார்த்திருக்கிறேன். சிலோன் ரேடியோவில் இருந்து, இன்றைக்கு இளையராஜாவின் எந்தப் பாட்டு போடுவார்கள், நமக்குப் பிடித்த, நம் மனதைச் சொல்லுகிற பாடலை போடுவார்களா என்று தவமிருந்தார்கள். சொல்லப்போனால், பிடிக்காத பாடல் என்பதே அவர்களிடம் இல்லை.
இன்றைய காலகட்டத்தில், சரணத்துக்கு மூன்று மாதம், பல்லவிக்கு ஆறுமாதம், மொத்தப்பாடல் உருவாவதற்கு ஒருவருடம் என்றெல்லாம் பெருமையுடன் சொல்கிறார்கள். நாம் ஒரு பீட்ஸா ஆர்டர் செய்துவிட்டு, ஸ்விக்கி தம்பி வந்து நம் வீட்டு காலிங்பெல் அழுத்திவிட்டு, பார்சல் தருகிற நேரத்திற்குள்ளேயே, ஒரு படத்துக்கான ஏழெட்டு பாடல்களைக் கொடுத்தார் இளையராஜா என்பதுதான் எட்டாவது அதிசயம்!

வெற்றிமாறனின் விடுதலை படங்களுக்குள் வனத்தின் பயம் கலந்த அடர்த்தியை இசையாக்கியிருப்பார். தனுஷையும் சிம்புவையும் இயக்கும்போது போகாத வெற்றிமாறன், காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக்கும்போது, ராஜாவின் இசைத்துணை பக்கத்துணையாக இருந்தது. அழகர்சாமியின் குதிரையின் நாயகனாக அப்புக்குட்டியை ஏற்றிய சுசிந்திரன், இளையராஜாவின் கையில் லகானைக் கொடுத்தார். மிஷ்கினின் பேரன்புக்குக்கும் சீனு ராமசாமியின் பெருங்கருணை கதாபாத்திரங்களுக்கும் ஜீவநாடியென இளையராஜா இருந்தார். அப்படி அவர் இருப்பார் என்பதால் ராஜாவை நாடினார்கள்.

இதோ... ரஜினி, விஜய் சேதுபதி என பலரை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், இந்தமுறை வளர்ந்து வரும் நடிகர்களைவைத்து ‘டோரத்தி’ தந்திருக்கிறார். இங்கே... மார்க்கெட், சந்தை, அங்காடி, மால்களையெல்லாம் கடந்து ‘வேல்யூ’ கொடுத்திருக்கிறார் இளையராஜா!

come back என்பது வாழ்க்கையின் அடுத்தகட்டம். பரமபத பாம்பு கொத்தி, மீண்டும் ஏணியில் ஏறுகிற வாய்ப்பு. இழந்த இடத்தை மீண்டும் தக்கவைக்க நடக்கிற யுத்தம். இந்த யுத்தசத்த, பரமபத விளையாட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இளையராஜா.அதனால்தான் அவர் இசைஞானி.

‘முத்துமணி’ பாடலின் கடைசியில் ‘மீனாட்சி காமாட்சி’ என அவர் உருகிக் குழையும்போது, நம் உயிரைத் தொட்டுவிட்டு அசைவற்று நிற்கவைக்கிறார். இன்றைக்கு இருக்கிற இளம் இசையமைப்பாளர்களுக்கு எண்பதுகள் கடந்தும் ராஜபவனி வருகிறார் இளையராஜா என்று முகநூலில் பலரும் எழுதிவருகிறார்கள். ராஜாவின் இசைக்கு வயசே இல்லை. அது மார்க்கண்டேய இசை!

- வி.ராம்ஜி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow