நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்... ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் சென்னை விருகம்பாக்கத்தில் மாணவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.

Aug 11, 2026 - 07:47
நீட் ஒழிப்புக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள்... ஆதரவுக்கரம் நீட்டும் CJP..!

கடந்த 1-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர். தொடக்கத்தில் 4 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது 3 மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறையை நீக்கி, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது நீட் எதிர்ப்பு இயக்கங்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதேபோல், கல்வியை மத்தியப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு தொடர்பான போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னமும் விருகம்பாக்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்களின் கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் வகையில் போராட்டக் களத்திலேயே அவர் இருந்து வருகிறார்.

10 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நீட் விலக்கு மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆபிஜித் தீப்கே வீடியோ அழைப்பு மூலம் உரையாடினார். அவர்களின் கோரிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்திய அவர், நீட் தேர்வு முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டத்துக்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.

மேலும், உடல்நிலை சீரடைந்ததும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து மாணவர்களை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் எழுச்சியால், யாருமே அசைத்துக் கூட பார்க்க முடியாது என்றிருந்த மோடி சர்க்காரே அசைக்கப்பட்டுவிட்டது. கடந்த 12 ஆண்டுகளில் எந்தவித போராட்டத்திற்கும் செவிசாய்க்காத  மோடி சர்க்கார், முதல்முறையாக கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தின் வெளிப்பாடாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா அரங்கேறியது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு   கரப்பான் பூச்சி கட்சியினர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், விரைவில் நீட் ரத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்றும், அதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் கனவுகளும் நிஜமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow