"மகனை முறையாக வளர்க்காத மு.க.ஸ்டாலின்"– அமைச்சர் ரமேஷ் காட்டம் !
தவெகவை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகளின் சர்ச்சைப் பேச்சுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"தொழில் முதலீடுகள் தொடர்பான புகைப்படம் எதுவும் வரவில்லை; வேறு ஒரு புகைப்படம் தான் வந்துள்ளது" என முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், எடப்பாடியாரின் இந்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டிய பொறுப்பு தலைவர்களுக்கு இருப்பதாகக் கூறினார். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாமல், பொறுப்புடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசியதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்புகூட கிடைக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
திமுகவின் பேச்சு கலாசாரம் குறித்து விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த செப்- 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்தில் தனது பதிலுரையின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினின் மிசா மற்றும் சார்க்காரிய கமிஷேன் மற்றும் உடல்மொழி உள்ளிட்டவைகள் திமுக தரப்பினர் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து செப்டம்பர் 12 ஆம் தேதி திமுக தமிழ்நாடு முழுவதும் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களின் போது, அக்கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் பேசிய பேச்சுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக ஆ.ராசாவின் பேச்சும், சேகர் பாபுவின் பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தவெகவின் அமைச்சர் நிர்மல்குமார் பிறப்பு குறித்து ஆ.ராசாவின் பேச்சு மிகுந்த கண்டத்திற்குரியது என்று எதிர்ப்பு வந்த நிலையில், தான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற்று கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், "திமுகவினரின் மேடைப் பேச்சுகளை விமர்சித்த அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது திமுகவின் அரசியல் கலாசாரமாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
திமுகவினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றும், அந்த வகையான பேச்சுகள் அக்கட்சியின் அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுகளையும் விமர்சித்த அமைச்சர், அதே பாணியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். அரசியல் அறம் இல்லாமல் பேசும் ஒருவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்."
மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ரமேஷ், தனது மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காதவர், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்குடனும் வழிநடத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கடந்த சில மாதங்களாக மட்டுமே ஏற்பட்டது போல் திமுகவினர் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய திமுகவினருக்கு, தற்போதைய அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்."
What's Your Reaction?