பரந்தூருக்கு ஒரு நியாயம்... ஓசூருக்கு ஒரு நியாயமா? இரட்டை நிலைப்பாடோடு செயல்படுகிறதா தவெக அரசு?
விவசாயிகளின் நலனை முன்வைத்து பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக தவெக அரசு தெரிவித்த நிலையில், ஓசூரில் விமான நிலையத் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளின் கோரிக்கைக்கு நேர்மாறான கருத்து முன்வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதால் தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் பாதிக்கப்படக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பரந்தூர் விவகாரத்தில் அரசு விவசாயிகளின் நலனையே முதன்மையாகக் கருதியதாக தெரிவித்தார். விமான நிலையத் திட்டத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகவும், விவசாயிகளின் நலனுக்காகவே திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் அதே நிலைப்பாடு தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 28) ஓசூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி பேசுகையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தனியார் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பரந்தூர் விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்தது போல் ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாய நிலங்களை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், ஓசூர் விவசாயிகளின் கவலையை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது அவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன் குறுக்கிட்டு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அதற்கு மாற்று வழி இல்லை என்றும் தெரிவித்தார். ஓசூருக்கு திட்டங்களும் வளர்ச்சியும் அதிகளவில் வர வேண்டும் என்பதற்காகவே நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதான் தற்போது அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ஒருபுறம், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரத்து செய்ததாக தவெக அரசு கூறுகிறது. மறுபுறம், ஓசூர் விமான நிலைய விவகாரத்தில், வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்ற கருத்து அவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், “பரந்தூரில் விவசாயிகளின் கண்ணீர் முக்கியம் என்றால், ஓசூரிலும் அதே அளவுகோல் பின்பற்றப்பட வேண்டாமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்ப்பது என்ற கொள்கையா, அல்லது குறிப்பிட்ட திட்டங்களின் அடிப்படையில் முடிவெடுப்பதா என்ற குழப்பமா அல்லது திமுக கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்ற அரசியல் காரணமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?

