மசாஜ் சென்டரில் இளைஞர்கள் அட்டகாசம்.. போலீஸ், பத்திரிகையாளர் எனக்கூறி பெண்களிடம் பாலியல் சீண்டல்
மசாஜ் சென்டர் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதோடு, சாலையில் ஓடியவர்களை துரத்தி துரத்தி வீடியோ எடுத்த போலி போலீஸ், போலி பத்திரிகையாளர் உள்பட நால்வரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொடைக்கானலில் பட்டப்பகலில் கெட்ட ஆட்டம் போட்ட இளைஞர்கள் நால்வர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
மசாஜ் செண்டர் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதோடு அவர்களை சாலையில் துரத்தி துரத்தி எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்தான் அரங்கேறி இருக்கிறது.
கொடைக்கானல் அண்ணாசாலையில் உள்ள மசாஜ் செண்டருக்கு வந்த நான்கு இளைஞர்கள் அங்குள்ள பெண்களிடம் மசாஜ் முடிந்தபிறகு தங்களுடன் பாலியல் உறவுக்கு வரவேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்கள், இங்கு மசாஜ் மட்டும்தான் செய்யப்படும் என்று கூறி எதிர்ப்பு காட்டி உள்ளனர்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இளைஞர்களில் ஒருவர் தான் போலீஸ் என்றும் மற்றொருவர் பத்திரிகையாளர் என்றும் கூறியிருக்கிறார். பத்திரிகையாளர் என்று தெரிவித்த சூர்யாவின் அடையாள அட்டை மே மாதத்துடன் காலாவதி ஆகி உள்ளது. அப்போது பெண்கள் மசாஜ் செண்டரில் இருந்து வெளியேற முயல, இளைஞர்கள் அவர்களை வெளியே விடாமல் வீடியோ எடுத்ததோடு, அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வெளியே வந்த பெண்களை விடாமல் அவர்கள் அண்ணாசாலையில் துரத்தியபடி தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அவர்களின் உடைகளை கிழித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி பட்டப்பகலில் பெண்களை விரட்டி இளைஞர்கள் நால்வரும் கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு விடுதிக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மசாஜ் செண்டர் உரிமையாளரும், பாதிக்கப்பட்ட பெண்களும் புகார் அளித்தனர்.
கொடைக்கானல் போலீசார் விடுதிக்கு சென்ற அந்த இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர்கள் சென்னையைச் சேர்ந்த சூர்யா மற்றும் பிரேம், அவரது நண்பர்களான ராணிப்பேட்டையை சேர்ந்த திவாகர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சாலமன் என்பது தெரிய வந்தது. அவர்களின் செல்போன்களில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளனர். மேலும் அவர்கள் போலி போலீஸ் , டுபாக்கூர் பத்திரிகையாளர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து கைபேசிகள் மற்றும் அவர்கள் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
What's Your Reaction?