"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!

"சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது" என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

Jul 24, 2026 - 18:00
"தியேட்டரில் அழுதுகொண்டு சீன் ஓட்டுவது அல்ல அரசு"- பிரேமலதா கடும் விமர்சனம்!
Premalatha Vijayakanth

காவிரி நீர் பிரச்சனை, அரிசி விலை உயர்வு மற்றும் லாக்கப் மரணங்கள் தொடர்பாகத் தமிழக அரசைத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமரிசித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. காவிரி ஆற்றில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா இதுவரை வழங்காத நிலையிலும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறிவரும் சூழலிலும் தமிழக அரசு வாய் திறக்காமல் இருக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் ஒரே நாளில் ஒரு டன் அரிசி விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரிசிக்கே இந்த நிலை என்றால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என்றார். எல்நினோ காலநிலை காரணமாக வறட்சியை நோக்கிச் செல்லும் சூழலில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் எனத் தொடர்ச்சியாக லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், ஒருவரை அடித்துக் கொல்ல காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜர்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow