விஜய்க்கு செக்? விஷ்ணு ரெட்டியை இழுத்துவிட்ட உதய்.. சிக்கலில் தவெக அரசு..!

விஜய்யின் நெருங்கிய நண்பரும் தவெகவின் முக்கிய ஆலோசகராகக் கூறப்படும் விஷ்ணு ரெட்டி மீது உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

Sep 7, 2026 - 14:53
விஜய்க்கு செக்? விஷ்ணு ரெட்டியை இழுத்துவிட்ட உதய்.. சிக்கலில் தவெக அரசு..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே மீண்டும் கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்களை அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார். சில விவகாரங்களுக்கு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டிப் பேசினார். 

முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்கள் முயன்ற நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அதோடு, முதலமைச்சரின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பதாகக் கூறப்படும் விஷ்ணு ரெட்டி குறித்தும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

45 நிமிட உரை... உதயநிதி காட்டம்

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, தவெக ஆட்சியின் 114 நாட்களில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சியாக தாங்கள் ஆதாரங்களுடன் கேள்விகளை எழுப்பியதாகக் கூறினார். சுமார் 45 நிமிடங்கள் முதலமைச்சர் விஜய் பேசியதாகவும், அதில் ஒரு பகுதி மட்டுமே காவல்துறை தொடர்பான விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உரையில் அரசியல் வாதங்களை விட திரைப்பட பாணியிலான வசனங்களும் 'பஞ்ச்'களுமே அதிகமாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.

திடீரென விஷ்ணு ரெட்டி பெயர்!

இந்த செய்தியாளர் சந்திப்பில் தான் முதலமைச்சர் விஜய்யுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் விஷ்ணு ரெட்டியின் பெயரை உதயநிதி ஸ்டாலின் நேரடியாகக் குறிப்பிட்டார்.

விஷ்ணு ரெட்டி தொடர்பாக தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய உதயநிதி, அவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சரின் உதவியாளராகக் குறிப்பிடப்படும் விஷ்ணு ரெட்டி, பல்வேறு நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உதயநிதி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடும் போது முழு விவரங்களும் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், தற்போது தவெக அரசியல் வட்டாரத்தில் விஷ்ணு ரெட்டி விவகாரம் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

யார் இந்த விஷ்ணு ரெட்டி?

முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவும், பிரபல தொழிலதிபராகவும் கூறப்படும் இவர், தவெகவின் சமீபத்திய அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் அன்றாட பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பயணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பு விஷ்ணு ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரின் அரசு நிர்வாகப் பங்களிப்பை முறைப்படுத்துவது, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்பதற்கான தளங்களை உருவாக்குவது, பொது நிகழ்ச்சிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், முதலமைச்சர் விஜய்யின் பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டங்கள் எந்தத் தடையும் இன்றி மக்களைச் சென்றடைவதை கண்காணிக்கும் முக்கியப் பணிகளும் அவரது ஆலோசனைக் குழுவின் பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் நெருங்கிய நண்பர்

விஜய்யுடன் கல்லூரி காலம் முதலே விஷ்ணு ரெட்டி நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு விஜய் வந்த பின்னரும், கட்சியின் முக்கிய அரசியல் நகர்வுகளில் விஷ்ணு ரெட்டி பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெகவின் முக்கிய அரசியல் வியூகங்களை உருவாக்குவதிலும், களப்பணிகளைத் திட்டமிடுவதிலும் அவர் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் மிகப்பெரிய சமூக வலைதளக் கட்டமைப்பை உருவாக்கி, வழிநடத்துவதில் விஷ்ணு ரெட்டி முக்கியப் பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஆளுநரைச் சந்திக்கச் சென்ற தவெக தலைவர்கள் அடங்கிய முக்கியக் குழுவிலும் விஷ்ணு ரெட்டி இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இது கட்சியின் உயர்மட்ட ஆலோசனை வட்டத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

விஷ்ணு ரெட்டி மீது ஏற்கெனவே சர்ச்சையா?

இதற்கிடையே, விஷ்ணு ரெட்டி தொடர்பாக ஏற்கெனவே சமூக வலைதளங்களில் சில குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பாஜக ஆதரவாளராக அறியப்படும் கிஷோர் கே. சுவாமி சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவில், சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் இணைந்து ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவற்றுக்கும் ரத்தீஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், இத்தகைய பின்னணியில் தவெக அரசு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் இந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் கிஷோர் கே. சுவாமி எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளின் உண்மைத் தன்மை தனியாக உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போது சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் விஷ்ணு ரெட்டி பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, அவரிடம் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஒருபுறம் முதலமைச்சர் விஜய் திமுகவின் கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ள நிலையில், மறுபுறம் திமுக தரப்பில் முதலமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள விஷ்ணு ரெட்டி தொடர்பான விவகாரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், விஷ்ணு ரெட்டி தொடர்பாக உதயநிதி வெளியிடப்போகும் ஆதாரங்கள் என்ன? அவை தவெக அரசியலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow