2 தொகுதிகளில் முதலில் இடைத்தேர்தலா? தனித்து போட்டியா? புறக்கணிப்பா? திமுகவின் முடிவு என்ன?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. 

Sep 5, 2026 - 21:00
2 தொகுதிகளில் முதலில் இடைத்தேர்தலா? தனித்து போட்டியா? புறக்கணிப்பா? திமுகவின் முடிவு என்ன?

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியாகின.

பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடைபட்டுள்ளது.

இந்த தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தான் ராஜினாமா செய்தபோது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றும், அதன் பின்னரே வழக்கு தொடரப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகள் நீண்ட காலமாக எம்.எல்.ஏ. இல்லாமல் இருப்பதால் பொதுமக்களின் பிரச்சினைகள் பாதிக்கப்படுவதாகவும், உடனே இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தனது ராஜினாமாவை திரும்பப் பெற விரும்புவதாக நீதிமன்றத்தை அணுகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக அவர் சபாநாயகரிடமும் கடிதம் அளித்துள்ள நிலையில், அந்த விவகாரம் பரிசீலனையில் இருக்கிறது. 

இந்நிலையில், தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு முதலில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டால், முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதே அடுத்த கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, அதிமுக வசம் இருந்த தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குமா, அல்லது கூட்டணி மற்றும் அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு போட்டியிலிருந்து விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக போட்டியிட்டால் தவெகவும் களமிறங்கும் பட்சத்தில், அதிமுக - தவெக - திமுக என மும்முனைப் போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை திமுக போட்டியிலிருந்து விலகினால், அந்த கட்சியின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதும் தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் எந்த தொகுதிகளுக்கு முதலில் தேர்தல் அறிவிக்கப்படும் என்பதோடு, அந்த தேர்தலில் திமுக எடுக்கும் முடிவு என்ன என்பது குறித்தும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதம் தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow