Rajat Patidar: மும்மூர்த்திகளை வென்று வித்தியாசமான சாதனை படைத்த ரஜத் பட்டிதார்!
பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் , ஐபிஎல் தொடரின் ஜாம்பாவன்களை வீழ்த்தியதன் மூலம் வித்தியாசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. ”யாரோ 10 பேரை அடிச்சு நான் டான் ஆனவன் இல்ல.. நான் அடிச்ச 10 பேருமே டான் தான்” என்கிற கே.ஜி.எப் ராக்கி பாய் வசனம் அப்படியே ரஜத் பட்டிதாருக்கு பொருந்தும் என்றால் மிகையல்ல.
ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளாக மும்பை மற்றும் சென்னை அணி உள்ளது. தலா 5 முறை ஐபிஎல் கோப்பையினை வென்று எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். இதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பை வென்று ஐபிஎல் தொடரில் எலைட் ஜாம்பவன்கள் லிஸ்டில் உள்ளது. பட்டிதார் செய்த சாதனையே, இந்த மூன்று அணிகளையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது தான்.
ஒரே சீசனில் சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் மும்பை அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்கிற சாதனையினை நிகழ்த்தி அசத்தியுள்ளார் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார். இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒரே சீசனில் சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் மும்பை அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணி. ஆனால், இதில் இரண்டு கேப்டன்களின் பங்களிப்பு இருந்தது.
ரஜத் பட்டிதார் தலைமை:
2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் முறையே இரண்டு மற்றும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, மும்பையினை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆடம் கில்கிறிஸ்ட் தலைமை தாங்கியிருந்தார். மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டிக்கு டேவிட் ஹஸ்ஸி கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
இந்த வருடம் ஆர்சிபி விளையாடியுள்ள 4 போட்டிகளில், பெங்களூரில் நடைப்பெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் மும்பையினை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு வீழ்த்தியது வரலாற்று நிகழ்வும் கூட. எப்படியென்றால், சென்னை அணியினை அதன் சொந்த மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தோற்கடித்தது பெங்களூரு அணி. இதைப்போல் மும்பை அணியினை 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வான்கடே மைதானத்தில் தோற்கடித்துள்ளது பெங்களூரு அணி.
இந்த வருடம் பெங்களூரு அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரஜத் பட்டிதார் தலைமையில் புத்துயிர் பெற்றுள்ள பெங்களூரு அணி இந்த ஆண்டு கோப்பையினை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read more: Ashwin: ஐபிஎல் முடியும் வரை CSK குறித்து பேசமாட்டோம்... சர்ச்சைகளால் அஸ்வின் எடுத்த முடிவு
What's Your Reaction?






