சாய் மகராஜின் உதி... துன்பங்களை தீர்க்கும் அருள் பிரசாதம்!
சாயிபாபாவின் உதி இறை அருளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதை நெற்றியில் இட்டு, நம்பிக்கையுடன் சாய் நாமம் சொல்லி வழிபடுவதன் மகத்துவத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
மங்கலச் சின்னங்களில், தெய்வங்களும் மகான்களும் குடிகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சாம்பல், இறைவன் சன்னதியில் இருந்து கிடைக்கும்போது விபூதியாகி விடுகிறது. சாதம் பிரசாதமாகிவிடுகிறது.
பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு, அங்கே வழங்குகிற விபூதியையும் குங்குமத்தையும் சந்தனத்தையும் நாம் பூஜையறையில் வைத்து நெற்றியில் இட்டுக் கொள்கிற தாத்பர்யம், மகத்துவ சக்தி கொண்டவை! இப்படித்தான் சாயிபாபாவை வழிபடும் பக்தர்கள், லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். கடந்த இருபது வருடங்களில், பாபா பக்தர்கள் அதிகரித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். அதனால்தான் குழந்தைகளுக்கு ‘சாய்’ என்று சேர்த்து பெயர் சூட்டி அழைக்கிற வழக்கமும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது.
சாயிபாபாவை, கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பூரித்துச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திக்கிறார்கள். ’நீயே கதி’ என சரணடைகின்றனர். 'ஏதேனும் ஒரு வடிவில் வந்து அற்புதங்கள் செய் சாய் மகராஜ்’ என்று நம்பிக்கையுடன் வணங்குகிறார்கள். நாம் வைக்கிற கோரிக்கைகளை, பாபா செவி மடுத்துக் கேட்கிறார்; நம் துன்பங்களைக் கண்டு ஓடி வந்து காக்கிறார் என பாபாவின் அருளாடல்களைச் சொல்லும் பக்தர்கள் ஏராளம்!
பாபா என்பவர் சாதாரண மனிதரைப் போல் நம்மிடையே உலவினார். அவரைப் பார்க்கப் பார்க்க, அவரின் அருளாடல்களைப் பார்க்கப் பார்க்க, ‘இவர் நம்மைப் போல் மனித ரூபத்தில் இருக்கிறார். ஆனால், இவர் மனிதரில்லை. மகான். நம்மையெல்லாம் உய்விக்க வந்த மகான்’ என்று ஷீர்டி எனும் கிராமத்துக்கு வந்து கொண்டாடினார்கள். போனிலோ நேரிலோ பேசும்போது வார்த்தையை தொடங்கும் போது, முடிக்கும் தருணத்தில், ‘சாய்ராம் சாய்ராம்’ என குளிரக்குளிர கனிவுடன் சொல்லுகிறார்கள். வார்த்தைக்குவார்த்தை பாபாவின் திருநாமம் சொல்லி அவரை பூஜித்துக் கொண்டே இருக்கிறார்கள் பக்தர்கள்.
பின்னொரு தருணத்தில், பாபா என்பது கடவுள் சொரூபம் என்பதாக மெய்சிலிர்த்து ஷீர்டியை நோக்கி வணங்கினார்கள். ஷீர்டி எண்ணற்ற பக்தர்கள், பாபா திருச்சமாதி அடைந்த பிறகும் ஷீர்டிக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக்கொண்டார்கள். இவற்றைக் கடந்து, இந்தியாவிலும் வடக்கிலும் தெற்கிலும் பாபா கோயில்கள் பெருகிவிட்டன. ஆலயங்களும் மந்திர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வியாழக்கிழமைகளில், குருவாகத் திகழும் பாபாவை தரிசித்து, பிரார்த்தனை செய்கிறார்கள். ’சாய் அப்பா சாய் அப்பா’ என்று அழுதபடி வேண்டிக்கொள்கிறார்கள். பாபா என்றால் அப்பா என்று அர்த்தம்! ‘நீ தயாராக இரு. உன் வேலைகளையெல்லாம் முடித்துக் கொடுக்க தயாராகிவிட்டேன். உன்னுடைய கர்மவினைகள் முடியும் தருணத்தில் உனக்கானதையெல்லாம் நிறைவேற்றித் தருவேன்’ என்கிறது சாயி சத்சரிதம்.இந்த சாயி சத்சரிதத்தை பாராயணம் செய்தபடி, பாபாவின் உதியை நெஞ்சில் வைத்து கண்ணில் ஒற்றி, நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள். உதி என்றால் விபூதி!
’எங்கள் வீடு சாய் மகராஜ் இருக்கிறார். அவருடைய சக்தி மிக்க உதி இருக்கிறது. எங்களையும் எங்கள் வம்சத்தையும் எந்த துக்கங்களும் இல்லாமல், காத்தருளுவார் பாபா. அவரின் உதி இருக்கும் இடத்தில், தீய எண்ணங்களும் தீய சக்திகளும் நெருங்காது என்று ‘ஓம் சாய் ஜெய் சாய்’ என்று உச்சரித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
‘இதோ... இந்த உதியின் வடிவில் நான் உங்களுடன் எப்போதும் இருக்கிறேன் என்கிறார் சாயிபாபா!
வி.ராம்ஜி
What's Your Reaction?