பாஜகவில் ஓரங்கட்டப்படுகிறாரா சரத்குமார்? தவெக பக்கம் நகர்கிறாரா?
பாஜகவில் இணைந்து ஓராண்டுகளுக்கு மேலாகியும் எதிர்பார்த்த அரசியல் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், நடிகர் சரத்குமார் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத்குமார், கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சரத்குமாருக்கும் தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை. தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் சரத்குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது கட்சியின் தேசிய நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலிலும் சரத்குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் பாஜகவில் தனது அரசியல் நிலை குறித்து சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியிலேயே அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து சரத்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராதிகாவுக்கும் விஜய்க்கும் இடையே நீண்டகாலமாக இருக்கும் நட்பும், இந்த அரசியல் நகர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தவெகவில் இணைவது தொடர்பாக முடிவு ஏற்படவில்லை என்றால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கும் வாய்ப்பையும் சரத்குமார் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இன்னும் ஓரிரு மாதங்களில் சரத்குமார் தனது முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அவரை பாஜகவிலேயே தொடர்ந்து வைத்திருக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
What's Your Reaction?
