இயற்கை பீர்க்கன் சாகுபடி! மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் வருவாய்...
இயற்கை முறையில் பீர்க்கங்காய் சாகுபடி செய்து ஏக்கருக்கு தினமும் 500 கிலோ வரை மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகளை ஈரோடு விவசாயி வேலுச்சாமி பகிர்ந்துள்ளார்.
காய்கறி இல்லாத காலை உணவு வேஸ்ட். இப்படி புகழ் பெற்றசித்த மருத்துவர்களே ரீல்ஸில் கலக்கி வருவதால், மாநகர மக்கள் பாரம்பரிய காய்கறிகளைத் தேடித் தேடி வாங்கி உணவில் சேர்த்துக் கொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது. மக்களின் தேவையை அறிந்து காய்கறிகளை உற்பத்தி செய்து, வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் விவசாயிகள்தான் ஸ்மார்ட் விவசாயிகள். அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி இயற்கை விவசாயி வேலுச்சாமி.
அசத்தும் இயற்கை விவசாயி
கிராமத்தின் நுழைவு வாயிலில் இடது புறமிருக்கும் உயர்ந்த கரட்டுக்கு கீழே கச்சிதமாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் வேலுச்சாமி. பூரண இயற்கை வழியில் காய்கறி விவசாயத்தில் செழிப்பாய் தடம் பதிக்கும் விவசாயி இவர். துவக்கத்தில் சொட்டு நீர் பாசனம் மூலமாக கரும்பு விவசாயத்தையே செய்திருக்கிறார். பொதுவாக ஓர் அறுவடை முடிந்ததும் அடுத்த நடவுக்கு முன்பாக கரும்புக்காட்டை தீயிட்டுக் கொளுத்துவார்கள். ஆனால், வேலுச்சாமி அதைச் செய்யவில்லை.
காரணம், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடுமே எனும் எண்ணத்தினால். அதனால் சுத்தமாக வழித்தெடுத்துவிட்டு புது நடவைத் துவக்கியிருக்கிறார். சில முறை இயற்கை வழி கரும்பு விவசாயத்தில் செழிக்கச் செழிக்க மகசூல் அள்ளி தரமான வருமானத்தைப் பார்த்திருக்கிறார். அதன் பின், சுமார் அறுபது சென்ட் நிலத்தில் இயற்கை வழியில் காய்கறி விவசாயம் செய்திருக்கிறார். பந்தல் சாகுபடியில் கவனிக்கத்தக்க மகசூலை அள்ளிவரும் வேலுச்சாமியிடம் பீர்க்கன் விதைத்து, இயற்கை வழியில் விவசாயம் செய்வது எப்படி? என கேட்ட நேரத்திலேயே உற்சாகமாக பேசத் தொடங்கினார் வேலுச்சாமி...
நிலம் ஈரமாக இருப்பது அவசியம்
"ஒரு ஏக்கரில் பீர்க்கன் சாகுபடி எப்படி இதை செய்வதுன்னு சொல்றேன். துவக்கத்துல ஒரு ஏக்கரையும் ஆழமா ரெண்டு உழவு ஓட்டிடணும். பிறகு ரொட்டாவேட்டர் வெச்சு ஒரு உழவு முடிச்சுடுங்க. இது மூலமா மண் பொடியாகிடும். அப்புறம் பந்தல் அமைச்சுடுங்க. வசதிக்கு ஏற்ப கல் கால் போட்டு பந்தலோ இல்லேன்னா கட்டைகளை வெச்சோ போட்டுக்கலாம். இந்த நிலையிலேயே சொட்டு நீர் பாசன டியூபையும் அமைச்சுடணும். பத்து அடி இடைவெளியில ஒரே ஒரு டியூப் போட்டுவிடுங்க, அதுல எட்டு அடிக்கு ஒரு டேப் (நீர் வரும் சிறு குழாய்) அமைச்சுடுங்க.
ஒவ்வொரு துளை வரும் இடத்துலேயும் ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலத்தில் வட்டப்பாத்தி அமைச்சுக்கணும். இதில் தொழு உரம் ஒரு சட்டி, நுண்ணுயிர் உரம் நூற்றைம்பது கிராம் அப்படிங்கிற அளவுல ஒவ்வொரு குழியிலேயும் போட்டுவிடுங்க. மேல்நோக்கு நாளாக பார்த்து விதைக்கணும். ஒரு குழிக்கு எட்டு முதல் பத்து விதைகளைப் போடலாம். விதைக்கும் முன் நிலத்தை தெளிவாக ஈரம் பண்ணிடுறது அவசியமுங்க.
மூன்று முதல் நான்கைந்து நாட்களில் விதை முளைத்து செடி மேலே வந்துடும். அதுக்குப் பிறகு ஒரேடியாய் நீர் கொடுக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கணக்கில் ஐந்து நிமிடம் நிலத்தை நனைச்சுவிட்டால் போதும். இப்படியே கருத்தா கவனிச்சுட்டு இருக்கணுமுங்க. நிலத்தின் ஆரோக்கியத் தன்மை, மற்றும் விதைகளின் தரத்தைப் பொறுத்து செடியின் வளர்ச்சி வேகம் இருக்கும்.
பொதுவா பத்துப் பதினைந்து நாட்களில் கொடி விட்டு வளரத் துவங்கிடும். பிறகு இருபத்தைந்தாவது நாள் நெருங்குறப்ப, கடலை புண்ணாக்கு 25 கிலோ, பருத்தி கொட்டை புண்ணாக்கு 10 கிலோ, எள்ளுப் புண்ணாக்கு 25 கிலோ, பெருங்காயம் 150 கிராம் அப்படிங்கிற அளவில் பேரலில் ஊற வைத்து, அந்தக் கலவை நீரை எடுத்து, இருபத்தைந்தாவது நாளில் ஒரு குழிக்கு ஒரு லிட்டர் அப்படிங்கிற அளவில் ஊற்றுங்க. இது பயிரின் தரமான வளர்ச்சிக்கும், நோய்களை எதிர்த்து நிற்கவும் உதவுமுங்க. இது போக ஜீவாமிர்தமும் அடிக்கடி கொடுக்கணும்.
அறுவடைக் காலம்
புண்ணாக்கு கரைசல் கொடுத்து முடித்த பிறகு, ஒவ்வொரு கொடியிலும் சரடு கட்டி அப்படியே செடியை மேலே தூக்கி பந்தல் கம்பியில் கட்டிடணும். பக்க கிளைகளை துவக்கத்திலேயே வெட்டிடணும். கட்டிவிட்ட பத்து நாட்களில் பந்தலைத் தொட்டுவிடும் பயிரின் வளர்ச்சி. விதைத்ததில் இருந்து முப்பது முதல் முப்பத்தைந்து நாட்களில் பூவிட்டுடும். அந்தப் பருவத்தில் கவனமா கண்காணிச்சுக்கணுமுங்க. முப்பத்து எட்டாவது நாள் வாக்கில் பிஞ்சுவிடும். பிறகு அது மளமளவென பெருக்க துவங்கிடும். அடுத்த ஒரு வாரத்தில் காய் அறுவடைக்கு வந்துடுமுங்க. பீர்க்கனை பொறுத்தவரையில் தரமான விதை, நல்ல கவனிப்பு இருந்தால் நாற்பது முதல் நாற்பத்தைந்து நாட்களுக்குள் முதல் அறுவடையைத் துவக்கிடலாம்.
அறுவடைக் காலத்தின் முதல் நாளில் ஏக்கருக்கு முப்பது முதல் நாற்பது கிலோ பறிப்பு கிடைக்குமுங்க. பிஞ்சுக் காய்களை மறுநாள் பறிப்புக்கு விட்டுட்டு, நல்ல சைஸான காய்களை மட்டும் பறிச்சு, விற்பனைக்குக் கொடுத்துடணும். நாற்பத்தைந்தாவது நாள் முதல் பறிப்பிலிருந்து தோராயமாக நூறாவது நாள் வரை அறுவடை எடுக்கலாம்.
இயற்கை வழி விவசாயத்தில் அதிலும் ஐம்பத்து ஐந்தாவது நாள் முதல் தரமான விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு தினமும் ஐந்நூறு கிலோ விளைச்சலை தாராளமா எடுக்கலாம். கிட்டத்தட்ட இருபது நாள் வரைக்கும் இந்த சூப்பர் விளைச்சல் கிடைக்கும். பிறகு அடுத்த இருபத்தைந்து நாட்களுக்கும் காய்ப்பு படிப்படியாக குறையும். கடைசி நாள் கூட நமக்கு ஐம்பது முதல் நூறு கிலோ வரை கொடுத்துட்டுதான் செடி தன் பணியை முடிக்கும். நாள்பட நாள்பட காய் சிறுப்பதே இதன் காரணமுங்க.
கிலோவுக்கு ரூ.50 விலை
தரமான விளைச்சல்னு பார்த்தீங்கன்னா, ஒரு காய் அரை கிலோ முதல் எழுநூறு கிராம் வரை இருப்பது சூப்பர் விளைச்சல். சிறப்பான விலைன்னா அது கிலோவுக்கு ஐம்பது ரூபாய் கிடைப்பதுதான். இவ்வளவு உச்ச விலை எப்பவுமே கிடைக்காது. ஆனால், ஒவ்வொரு வருடமும் இந்த விலையை நாங்கள் சந்திக்காமல் இருப்பது கிடையாது. ஆனாலும் இயற்கை முறையில் விளைஞ்ச பீர்க்கன் கிலோ முப்பது ரூபாய்க்கு போனாலுமே கூட அது நல்ல விலைதான். பீர்க்கனை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட வருஷம் முழுக்கவே விதைப்பும், அறுவடையுமா இருக்கும்.
மகசூல் உச்சத்துல இருக்குற நேரத்துல ஏக்கருக்கு ஐந்நூறு கிலோ அறுவடை கிடைச்சு, அது கிலோ ஐம்பது ரூபாய்க்கு விலை போச்சுன்னா ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இது லாட்டரி விழுந்த மாதிரியான நிலை. ரெகுலரா கிடைக்கவே கிடைக்காது. ஆனால், கிலோ முப்பது ரூபாய்க்கு ரெகுலரா போனாலுமே கூட பதினைந்தாயிரம் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலமிருந்தாலும் போதுமுங்க நம்பி பீர்க்கனை விளைய வைக்கலாம். நிச்சயமா நம்மை வாழ்க்கையில் வகையாக கரையேத்திப்போடும்” என்று முடித்தார்.
பீர்க்கங்காய் பதார்த்தம் மாநகர வீடுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் நேரத்தில், விவசாயிகள் வருவாயை வாரிச் சுருட்டலாம்.
What's Your Reaction?