சட்டமன்ற LIVE இனி கிடையாது? அடுத்தடுத்த சர்ச்சைகள்.. அதிரடி ஆக்ஷனில் சபாநாயகர்..!
தமிழ்நாடு சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருவது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டு வரும் நிலையில், இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுக்க சபாநாயகர் திட்டமிட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே சட்டசபை நிகழ்வுகள் இடைவெளியின்றி நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பிலான யூடியூப் பக்கத்திலும் இந்த நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் அவையில் முன்வைக்கப்படும் விதம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் நேரடியாக கவனிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபை நேரலைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், மறுபுறம் சட்டசபை விவாதங்களின்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அறிவிக்கிறார். அவ்வாறு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் அல்லது காட்சிகள், நேரலை ஒளிபரப்பு மூலம் ஏற்கனவே பொதுமக்களை சென்றடைவதால், பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக கொறடா எ.வ. வேலு உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பினர் சபாநாயகரிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சுகள் மற்றும் காட்சிகளை ரீல்ஸ் அல்லது வீடியோவாக வெளியிடக்கூடாது என தெரிவித்திருந்தார். மேலும், இதுபோன்ற பதிவுகள் குறித்து பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
எனினும், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைய நேரலை முறையில் மாற்றம் செய்வது குறித்து சட்டசபை செயலகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சட்டசபை நிகழ்வுகளை முற்றிலும் நேரலையாக ஒளிபரப்புவதற்கு பதிலாக, சில நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்பும் நடைமுறையை கொண்டுவருவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. குறிப்பாக, 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், சட்டசபையில் பேசப்படும் கருத்துகளை உடனடியாக நேரலையில் ஒளிபரப்பாமல், குறிப்பிட்ட காலதாமதத்துடன் காட்சிகளை ஒளிபரப்ப முடியும். இதன் மூலம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டிய பகுதிகளை நேரலை ஒளிபரப்பில் இருந்து தவிர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான தொழில்நுட்ப சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், சோதனை வெற்றிகரமாக அமைந்தால் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக சட்டசபை செயலகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, சட்டசபை நடவடிக்கைகளை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கருத்தும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. சட்டசபை விவாதங்களை பொதுமக்கள் நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில், நேரலை ஒளிபரப்பில் மாற்றம் கொண்டு வருவது வெளிப்படைத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தங்களது தொகுதி எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், மக்கள் பிரச்சினைகள் அவையில் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை பொதுமக்கள் நேரடியாக கவனிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சட்டசபை நேரலை தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனவே, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுப்பதற்காக நேரலைக்கு காலதாமதம் கொண்டுவரப்படுமா அல்லது தற்போதைய நேரலை முறையே தொடருமா என்பது குறித்த இறுதி முடிவை சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலகம் விரைவில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?

