ரூ.1200 கோடி திட்டம்... 26 ஏக்கரில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம் குறித்த நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது.
புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் செயலாக்க நடவடிக்கைகளுக்காக தனித்தனி குழுக்களை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்ட திட்டம் :
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த புதிய நிர்வாக மையம், அரசு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளது.
அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அமையலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் சதுர அடியில் புதிய நிர்வாக வளாகம் :
பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான பகுதிகளில் இருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
திட்டத்தின் அடுத்தகட்டமாக கட்டட வடிவமைப்பு, வரைபடம் தயாரித்தல், கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், பொதுப்பணித்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலை ஒட்டிய பகுதியில் அமையும் தலைமைச் செயலகம் :
பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய முக்கியமான பகுதியில் அமைந்துள்ளதால், புதிய தலைமைச் செயலகத்தின் இடத் தேர்வு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
ஏற்கனவே நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடலோர பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த திட்டம் தமிழ்நாட்டின் நிர்வாக வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இடத் தேர்வு குறித்து சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் அனுமதி :
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிர்வாக வளாகத்திற்காக மொத்தம் சுமார் 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளது.
இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம், மாநகராட்சி நிலம் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான பகுதிகள் இடம்பெறுகின்றன.
திட்டத்துக்கு எதிர்ப்பு... மீனவர்கள் கவலை :
இதற்கிடையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்கு சில தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அப்பகுதி மீனவர்கள், புதிய கட்டுமானம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே மக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து சிக்கல்களை சந்தித்து வரும் பட்டினப்பாக்கம் பகுதியில், புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் கூடுதல் நெரிசல் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு :
அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான கட்டுமான பணிகள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், சுற்றுச்சூழல் தாக்கம், போக்குவரத்து வசதி, பொதுமக்களின் கருத்துகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
What's Your Reaction?