எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? – வானிலை அப்டேட்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Aug 7, 2026 - 17:28
Weather
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகத்தின் வழியாக நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திண்டுக்கல், திருப்பத்தூர், நாமக்கல், செங்கல்பட்டு, கோவை, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.