அடக்க நினைக்கும் இஸ்ரேல்.. அடங்க மறுக்கும் ஈரான்.. கைக்கொடுக்கும் அமெரிக்கா..!

இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தியதையடுத்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள முடிவால் மூன்றாம் உலகப்போர் முற்ற உள்ளதா என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

Oct 2, 2024 - 10:57
அடக்க நினைக்கும் இஸ்ரேல்.. அடங்க மறுக்கும் ஈரான்.. கைக்கொடுக்கும் அமெரிக்கா..!

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். காஸ் என்ற ஒரு இடமே இருந்ததற்கான அடையாளங்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன. 

இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. 

இதனிடையே லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்துள்ளது. அதன்படி நேற்று (அக். 1) இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போயுள்ளது. 

இதுதொடர்பாக பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. காஸா, லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட வேதனையான பாடத்தை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை, அமெரிக்க அதிபர் பைடன் வன்மையாகக் கண்டித்துள்ளார். 

அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவ படைக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவிபுரிந்துவந்ததாக அமெரிக்காமீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow