ஆலய உலா – Episode 1...திருமுல்லைவாயில் தலத்தின் அதிசய சிறப்பு!

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் அமாவாசையில் சிவனையும், பவுர்ணமியில் அம்பாளையும் வழிபட்டால் வாழ்வில் நிம்மதியும் வளமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Sep 9, 2026 - 18:00
ஆலய உலா – Episode 1...திருமுல்லைவாயில் தலத்தின் அதிசய சிறப்பு!
Masilamaniswarar Temple

அமாவாசையில் சிவன்; பவுர்ணமியில் அம்பாள்!
திருமுல்லைவாயில் அதிசயம்!

திருமுல்லைவாயில் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், வாழ்க்கையில் வசந்தக்காற்று வீசும் என்பது ஐதீகம். சென்னைக்கு அருகில் உள்ளது திருமுல்லைவாயில். அம்பத்தூர் மற்றும் ஆவடிக்கு அருகில் உள்ள மிக முக்கியமான சிவ திருத்தலம் என்று திருமுல்லைவாயில் கொண்டாடப்படுகிறது. இங்கேயுள்ள சிவபெருமானின் திருநாமம் மாசிலாமணீஸ்வரர். அம்பாளின் பெயர் கொடியிடைநாயகி.

தலம், தீர்த்தம், மூர்த்தம் என்று போற்றுகிற எண்ணற்ற திருத்தலங்களில் இந்தக் கோயிலும் உண்டு. வில்வத்தையும் முல்லையையும் ஸ்தல விருட்சமாகக் கொண்ட திருமுல்லைவாயில் கோயிலின் தீர்த்தம் ஐராவத தீர்த்தம் எனக் கொண்டாடப்படுகிறது.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் சுந்தரர் பதிகம் பாடிய தலம் எனும் சிறப்புக்கு உரிய திருமுல்லைவாயில் கோயிலில், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், வசிஷ்டர் முதலானோர் வழிபட்டார்கள் என்கிறது ஸ்தல புராணம். ஆவடியில் இருந்தும் அம்பத்தூரில் இருந்தும் திருமுல்லைவாயில் கோயிலை வந்தடையலாம்.  
பிரளய காலத்தின்போது, நீரில் மூழ்காமல், எந்தக் காலத்திலும் அழியாத இடத்தைச் சொல்லுவாயாக; எங்களுக்குக் காட்டி அருளுவாயாக! என்று பார்வதி தேவி சிவபெருமானிடம் வேண்டினார். உமையவளுக்கு ஈசன் காட்டிய இடமே திருமுல்லைவாயில் ஸ்தலம் என்கிறது புராணம்.

தொண்டை மண்டலக் கோயில்களில் மிக முக்கியமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தலம் என்றும் சரித்திரம் விவரிக்கிறது. தொண்டை தேசத்துக்கு வடக்கே குறும்பர்கள் எனும் பிரிவினர் வாழ்ந்துவந்தார்கள். வெள்ளெருக்கந்தூண்களைக் கொண்டு சுவர் எழுப்பி, அதில் வாழ்ந்தபடி மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தார்கள். இவர்களை ஓணன் என்றும் வாணன் என்றும் வரலாறு விவரிக்கிறது.

ஒருகட்டத்தில், இவர்களின் ஆட்டத்தை மக்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கண்ணீரும்கம்பலையுமாக தொண்டை மன்னனிடம் வந்து கெஞ்சினார்கள். காப்பாற்றுங்கள் என முறையிட்டார்கள். மக்களைக் காப்பதற்காக, படையுடன் புறப்பட்டான் மன்னன். அப்படி அரசன் வந்து நின்ற இடம்தான் திருமுல்லைவாயில்.
தொண்டை மன்னனுக்கும் குறும்பர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டது. இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலுமாக மரணங்கள் நிகழ்ந்தன. யானை மீது அமர்ந்து போரிட்டு, எதிரிகளை துவம்சம் செய்துகொண்டிருந்தான் மன்னன். அப்போது யானையின் கால்களை முல்லைக்கொடிகள் சுற்றிக்கொண்டன.

ஆனானப்பட்ட யானையால் முல்லைக்கொடியின் சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளமுடியவில்லை. எதிரிகள் மன்னனை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், தன் உடைவாளை எடுத்து, முல்லைக்கொடிகளை வெட்டிச் சாய்த்தான். யானையின் கால்களில் சுற்றிக்கொண்டிருந்த முல்லைக்கொடி, பூமியில் இருந்தே பிளந்து சாய்ந்தது.

அப்படி பிளவு ஏற்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. பதறிப்போன மன்னன், யானையில் இருந்து இறங்கி, முல்லைக்கொடி சூழ்ந்த இடத்தை விலக்கினான். அங்கே சிவலிங்கம். லிங்கத்திருமேனியில் இருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ‘என் சிவமே... என்ன காரியம் செய்துவிட்டேன்’ என்று கலங்கிக் கதறியவன், வாளை எடுத்து தன் கழுத்தில் வைத்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முனைந்தான்.

அங்கே சிவபெருமான் தோன்றினார். மன்னனுக்குக் காட்சி தந்தார். பிறகு நந்திதேவருடன் சென்று மன்னன், அந்த குசும்புத்தன குறும்பர்களை அழித்தான்; அதையடுத்து அங்கே கோயில் எழுப்பினான். அதனால்தான் இந்த ஊருக்கு திருமுல்லைவாயில் என்றும் சிவனாருக்கு முல்லைவன நாதர் என்றும் அம்பாளுக்கு கொடியிடை நாயகி என்றும் பெயர்கள் அமைந்ததாக விவரிக்கிறது ஸ்தல வரலாறு.

அழகாக, நயமாக, நுட்பமாக அமைந்திருக்கிறது ஆலயம். இங்கே உள்ள நந்தி சிவனாருக்கு முன்னே திரும்பிய நிலையில் இருக்கிற காட்சியும் அரிதான ஒன்று. சில கோயில்களில் மட்டுமே திரும்பிய நிலையில் உள்ள நந்தியை தரிசிக்கமுடியும்.

சிதம்பரத்துக்கு அருகே திருமுல்லைவாயில் என்று தலம் உள்ளது. ஆகவே சிதம்பரம் திருமுல்லைவாயிலை தென் திருமுல்லைவாயில் என்றும் சென்னைக்கு அருகில் உள்ள இந்தக் கோயில் அமைந்திருக்கும் ஊரை, வட திருமுல்லைவாயில் என்றும் அழைக்கின்றனர்.

அமாவாசையில் சிவனையும் பவுர்ணமியில் அம்பாளையும் வந்து வேண்டிக்கொண்டு பலன் பெறுகிற பக்தர்கள் ஏராளம்! திருமுல்லைவாயில் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால், வாழ்வில் வசந்தக் காற்று வீசும்; நிம்மதியும் ஆனந்தமும் சூழ வாழலாம் என்பது ஐதீகம்!

-வி.ராம்ஜி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow