உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்....அப்படி என்ன பேசினார்?

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, விதி 110 குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது பேச்சை வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அவரைப் பாராட்டினார்.

Sep 2, 2026 - 18:30
உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்....அப்படி என்ன பேசினார்?

தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வள மேம்பாட்டுத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கடந்த மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில் தங்களது உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் மனிதநேய அடிப்படையில் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். இதில் சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளும் அடங்கும்.

மேலும், ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.4,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களைப் பெறுவதில் நிலவும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், அவை இனி டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் விஜய், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார்.

முதலமைச்சர் விஜயின் அறிவிப்புகளை அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசினர். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வழக்குகள் வாபஸ் பெறப்படுவது இதுதான் வரலாற்றில் முதன்முறை என அமைச்சர் ஒருவர் பேசியதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பேசிய அவர், “இது சரியான தகவல் இல்லை. எங்களுடைய தலைவர் தலைமையிலான ஆட்சியின்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டம், 8 வழிச்சாலை போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றுள்ளார்.

அப்போது எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர், விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரிகளை அழைத்து தெரிவித்து, இந்த அவையில் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். எனவே, இந்த அறிவிப்பு முதன்முறையல்ல” என்றார்.

இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது நான், எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று கூறியிருந்தேன். நீங்கள் அதை அவைக்குறிப்பில் எடுத்துக்காட்டினீர்கள். அதில், 110 விதியின் கீழ்தான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இதனால், நான் பேசிய குறிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்த ஆதாரத்தைக் காட்டியவுடன், இதனை உடனடியாகக் கவனத்தில் கொண்டு, ‘நான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறிய பெருந்தன்மைக்காக அவரைப் பாராட்டுகிறேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow