குளத்துக்குள்ளேயே 5 ஆண்டுகளாக வாழும் 16 வயது சிறுவன்.. மர்ம காரணம் என்ன?
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், தண்ணீரை விட்டு வெளியே வர முடியாமல் குளத்துக்குள்ளேயே நாட்களை கழித்து வரும் 16 வயது சிறுவனின் நிலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெல்டாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற அந்த சிறுவன், கடந்த சுமார் 5 ஆண்டுகளாக இந்த பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தண்ணீரிலிருந்து வெளியே வந்து காற்றில் இருக்கும் போது உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சலும் அமைதியின்மையும் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல நேரங்களில் தொடர்ந்து 4 முதல் 7 நாட்கள் வரை குளத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. உணவு உட்கொள்வது, தூங்குவது என அன்றாட தேவைகளையும் அவர் தண்ணீருக்குள்ளேயே மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நீரில் இருப்பதால் அவரது கை, கால்களில் உள்ள தோல் வெளுத்து காணப்படுவதுடன், தோல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி இருமல் மற்றும் சளி போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்பாலின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதி இல்லாததால், அவரது பிரச்சினைக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் குளத்தில் இருக்கும் நேரங்களில், அப்பகுதி மக்கள் குளக்கரைக்குச் சென்று உணவு வழங்கி வருகின்றனர். அவரது நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள கிராம மக்கள், அரசு அதிகாரிகள் தலையிட்டு சிறுவனுக்கு முறையான மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்பாலுக்கு தண்ணீரை விட்டு வெளியே வந்தவுடன் ஏன் இத்தகைய கடுமையான எரிச்சல் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் இதுவரை மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரது உடல்நிலைக்கான காரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும்.
What's Your Reaction?



