ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 கரெக்ஷன் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி 

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 கரெக்ஷன் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி 
ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 கரெக்ஷன்

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020-இன்படி, 2026-27ஆம் கல்வியாண்டிற்காக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தயாரிக்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டது.  மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தயாரித்த புத்தகங்களில், எளிய எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி, பல மோசமான வரலாற்று, அறிவியல் மற்றும் புவியியல் பிழைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 1,678 பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் மிக அதிகமாக 705 பிழைகள் இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி 8ஆம் வகுப்பு புத்தகத்தில், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், (Sir Isaac Newton), ஒரு சிறந்த விமானி (Greatest Pilot) எனத் தவறாக கூறப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக சட்டமன்றத்தின் (Vidhan Soudha) புகைப்படம் ஒடிசா சட்டமன்றத்தின் புகைப்படம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, கர்நாடகாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'ஹம்பி' (Hampi) கோயில் வளாகம், ஒடிஷாவின் அடையாளம் சொல்லும் 'கோனார்க் சூரியக் கோயில்’ (Konark Sun Temple) என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசாவின் ’நியாம்கிரி மலைத்தொடர்' (Niyamgiri Hills) அண்டை மாநிலமான ஜார்கண்டில் இருப்பதாகக் சொல்லப்பட்டுள்ளது. 

அதேபோல், கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் (Berhampur) என்ற நகரம் ஒரு ’தனி மாவட்டம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர, அறிவியல் பாடங்களில் வெப்பநிலை (Temperature) என்பதற்குப் பதிலாக அழுத்தம் (Pressure) என்றும், உணவு வலை (Food Web) என்பதற்குப் பதிலாக உணவுச் சுழற்சி (Food Cycle) என்றும் தவறாக உள்ளது. புவியியலில் 'ஈக்வினாக்ஸ்' (Equinox - சம இரவு பகல் நாள்) என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஈக்வேட்டர்' (Equator - பூமத்திய ரேகை) என்று பிழையாக உள்ளது.

இந்த விவகாரம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் ஓடிசாவில் பூதாகரமாக வெடித்துள்ளதால், அம்மாநில பாஜக முதல்வர்  மோகன் சரண் மாஜி அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த தவறுகளுக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், புத்தகங்கள் ஏற்கெனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டதாலும், மீண்டும் அச்சடிக்க 6 மாதங்களுக்கும் மேலாகும் என்பதாலும் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று அரசு அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow