ராகுல்காந்திக்கு இவ்வளவு சொத்தா? போக்சோ வழக்கை எதிர்கொள்கிறாரா? வேட்புமனுத்தாக்கலின் போது வெளியான தகவல்..
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, வேட்புமனுத்தாக்கலின் போது குறிப்பிட்ட பல்வேறு முக்கியத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுசெயலாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் பேரில், ரூ.9.24 கோடி அசையும் சொத்துகளும், ரூ.11.15 கோடி அசையா சொத்துகளும் என ஏறத்தாழ ரூ.20 கோடி சொத்துகள் அவருக்கு இருப்பதாக அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ரூ.55,000 ரொக்கம், ரூ.26.25 லட்சம் வங்கி டெபாசிட், ரூ.4.33 கோடி மதிப்பிலான பங்கு மதிப்பு, ரூ.3.81 கோடி மியூச்சுவல் ஃபண்டு, ரூ.15.21 லட்சம் தங்க முதலீடு, ரூ.4.20 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியன இதில் அடங்கும். இதுதவிர ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் அவருக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி குருகிராமில் உள்ள ரூ.9 கோடி மதிப்பிலான கட்சி அலுவலகம், பிரியங்கா காந்தியுடன் டெல்லியின் மெஹ்ராலியில் வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு தன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவத்தைப் பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 9 வயது தலித் சிறுமியின் உடல், பெற்றோருக்கு தெரியாமல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தபின், அதன் புகைப்படங்களை X தளத்தில் ராகுல்காந்தி வெளியிட்டார். இந்த நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த பெற்றோரின் கண்ணீர் தரும் செய்தி எனக்கூறி, அதனுடன் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, புகைப்படங்களை நீக்கிவிட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளபோது, FIR-ன் விவரங்கள் தனக்கு தெரியாது எனவும், அதன்படி தான் குற்றம்சாட்டப்பட்டவனா என்பது கூடத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மிகுந்த எச்சரிக்கையுடன் இத்தகவலை தானே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக தலைவர்களால் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், தன் மீதான குற்றவியல் சதி வழக்கையும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, இந்தத் தேர்தலில் பாஜகவின் மாநிலத்தலைவர் கே.சுரேந்தரனையும், CPI மூத்த தலைவர் அன்னிராஜாவையும் எதிர்கொள்கிறார்.
What's Your Reaction?