கதண்டு வண்டு கடித்து பெண் ஏட்டு உள்பட 10 பேர் படுகாயம்
அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
பட்டுக்கோட்டையில் கதண்டு வண்டு கடித்து பெண் தலைமைக் காவலர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தாலுக்கா அலுவலகம் அருகில் ராஜாமடம் கிளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அருகிலிருந்து இன்று திடீரென கதண்டு வண்டுகள் பறந்துவந்து பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பயங்கரமாக கடித்தது. இதில் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கதண்டு வண்டு கடித்தபோது அவர்கள் அலறியடித்து தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை சாலையில் அப்படியே போட்டுவிட்டு அங்குமிங்கும் சிதறி ஓடினர்.
இதுதவிர சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் கதண்டு வண்டு கடித்தது. இதில் அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர் கிரேஸி (50), பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த அப்பாசாமி (73) திருச்சிற்றம்பலம் (67) நாராயணசாமி (67) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.கதண்டு வண்டு கடித்து படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?