"உடாத மச்சி, அவன போட்டுத்தள்ளு.." கொலைவெறித் தாக்குதல் வீடியோ.. கஞ்சா இளசுகளுக்குக் காப்பு..

Apr 21, 2024 - 09:08
"உடாத மச்சி, அவன போட்டுத்தள்ளு.." கொலைவெறித் தாக்குதல் வீடியோ.. கஞ்சா இளசுகளுக்குக் காப்பு..

கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பாலக்கரை அருகே இளைஞர்கள் சிலர் சாலையை மறித்தபடி நின்றிருந்ததாகத் தெரிகிறது. அவர்களை ஓரமாக நிற்குமாறு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் கூறவே, இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். 

ஒரு கட்டத்தில் அவர் அமைதியாக விலகிச் செல்ல முற்பட்ட போதும், தகாத வார்த்தைகளை பேசி அவரை கொடூரமாக இளைஞர்கள் தாக்கினர்..

இந்தத் தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களையும் அந்தக் கும்பல் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 2 செய்தியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அங்கிருந்த தப்ப முயன்ற நிலையில், 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பாலக்கரையைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் ஜனார்த்தனன் என தெரியவந்துள்ளது. காயமடைந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் செய்தியாளர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த ஓட்டுநர் ரமேஷ், தன்னிடம் இருந்த செயின், மோதிரம் உள்ளிட்டவற்றைக் காணவில்லை எனவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow