அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவு... ஜாமினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி!

''அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய வழக்கின் முக்கிய சாரம்சங்களை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது நியாயமற்றது''

Jun 25, 2024 - 17:32
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவு... ஜாமினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி!
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசு,வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டு கெஜ்ரிவாலை சிறையில் அடைத்துள்ளதாகவும், அமலாக்கத்துறையை மத்திய அரசு தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், 'மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்ய தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 

இதன்பிறகு மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. 

''எங்கள் தரப்பு வாதங்களை சரியாக கேட்காமல் டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றம் அவசரம், அவசரமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது'' என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் வழக்கு விசாரணையை 25ம் தேதி (அதாவது இன்று) ஒத்திவைத்தது. இதன்பிறகு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடையை விலக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவரச வழக்காக விசாரிக்க கெஜ்ரிவால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் இதை அவசர வழக்காக ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. அதுபோக 25ம் தேதி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ள உள்ளதால், அதற்குள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை'' என்று கூறினார்கள்.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை தொடர்கிறது என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிர் குமார் தனது தீர்ப்பில், ''அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய வழக்கின் முக்கிய சாரம்சங்களை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது நியாயமற்றது.

இந்த வழக்கில் சட்டப்பிரிவு 70 PMLA கீழ் கட்டாய நிபந்தனைகள் குறித்து ஆலோசனை செய்யாமல் விசாரணை நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆகவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow