9 எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சம்..! அப்படி என்ன ஸ்பெஷல்..?
விழுப்புரத்தில் கோயில் விழா ஒன்றில் ரூ.2.36 லட்சத்துக்கு 9 எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மவட்டம் ஒட்டனந்தலில் ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி தேரோட்டமும், 24-ம் தேதி காவடி பூஜை மற்றும் 25-ம் தேதி நள்ளிரவு இடும்பன் பூஜை நடைபெற்றது. திருவிழாவின் முதல் 9 நாட்களில் கருவறையிலுள்ள முருகனின் வேலில் சொருகி வழிபாடு நடத்தப்பட்ட 9 எலுமிச்சை பழங்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
கோயில் நாட்டாண்மை புருசோத்தமன் ஆணி தைத்த காலணியில் ஏறி நின்று எலுமிச்சை பழங்களை ஏலம் விட்டார். அதன் படி முதல் நாள் எலுமிட்டை ரூ.5.,500-க்கும், இரண்டாம் நாள் பழம் ரூ.26,500-க்கும், மூன்றாம் நாள் பழம் ரூ.42,100, நான்காம் நாள் பழம் ரூ.19,000, ஐந்தாம் நாள் பழம் ரூ.11,000, ஆறாம் நாள் பழம் ரூ.34 ஆயிரம், ஏழாம் நாள் பழம் ரூ.24,500, எட்டாம் நாள் பழம் ரூ.13,500, ஒன்பதாம் நாள் பழம் ரூ.15,000 என 9 நாட்கள் பழங்கள் ரூ.2,36,100-க்கு ஏலம் போகின. இந்த ஏலத்தில் விடப்படும் எலுமிச்சையை குழந்தை இல்லா தம்பதியினர் வாங்கி சென்றால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
ஆகையால் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் எலுமிச்சை பழம் ஏலத்தில் பங்கேற்றனர். ஏற்கனவே இதுபோன்ற ஏலத்தில் எலுமிச்சை வாங்கி சென்று குழந்தை பேறு பெற்ற தம்பதிகள், தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து துலாபாரம் செலுத்தினர். கடந்தாண்டு 9 பழங்களும் ரூ.80,300-க்கும் மட்டுமே ஏலம் போன நிலையில், நடப்பாண்டில் 9 நாள் எலுமிச்சை பழங்கள் ரூ.1,55,800 கூடுதலாக ஏலம் போயுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?