சவுதியில் உயிரிழந்த புதுக்கோட்டை தொழிலாளி.. "எங்க அப்பா முகத்த பாக்கணும்".. கதறி அழுத பிள்ளைகள்
சவுதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்ற இடத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டுமென அவரது பிள்ளைகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. 48 வயதான இவருக்கும் பாசமலர் என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அண்ணாமலை பிழைப்புக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா நாட்டிற்கு கட்டட வேலைக்காக சென்றிருந்தார்.
அண்ணாமலையின் உழைப்பால், வறுமையில் இருந்து குடும்பம் மெல்ல மெல்ல விடுபட்டு வந்த வேளையில், குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற அண்ணாமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனியாக சக பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அண்ணாமலை உயிரிழந்தார்.
இதையடுத்து அண்ணாமலையின் மரணச் செய்தியை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் நொறுங்கி விழுந்தனர். குடும்பத்தைக் காத்துவந்த ஆணி வேரே அறுந்துவிட்டதை நினைத்து அவர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலையின் மகள் தீபிகா, “எங்க அப்பா முகத்தை எப்டியாவது நாங்க பாக்கணும். அதுக்கு அரசு ஏதாவது உதவி செய்யணும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
உறவினர் முருகானந்தம் பேசும்போது, அண்ணாமலையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
குடும்பத்தைப் பிரிந்து உழைப்பதற்காக சவுதி அரேபியா சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஆத்தங்கரை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
What's Your Reaction?