சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்டதா?... ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பு..!
“கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளது”
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 முதல் 2014-ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தவரையில் ஈட்டிய ரூ.3 கோடிக்கும் மேலாக வருவாவாய் ஈட்டியதாகவும் ஆனால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஆண்டுக்கு வெறும் ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே வருவாய் ஈட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தீட்சிதர்கள் சார்பில் அதற்கான வரவு செலவு கணக்கு அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மற்றுமொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக 3000 ஏக்கர் நிலம் இருந்ததாகவும் அதில் 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது, ஒரு ஆண்டில் லட்சத்துக்கும் குறைவாகவே வருவாய் வருவது குறித்து விளக்கம் கேட்ட நீதிபதிகள், அதோடு, பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை வருவாய் கணக்கில் வைக்காதது குறித்தும் விளக்கம் கேட்டனர். மேலும், 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்குகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதோடு, தீட்சிதர்கள் 2000 ஏக்கர் நிலத்தை தனி நபருக்கு விற்பனை செய்தது குறித்த முழு விவரங்களையும் ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், கோவில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசம் இல்லை எனவும், எந்த நிலத்தையும் தீட்சிதர்கள் விற்கவில்லை என்றும், மேலும், அப்படி நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறியிருந்தார். அதோடு, நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவில் நிலங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும், நகைகள் அனைத்துக்கும் கணக்கு உள்ளது, ஒரு நகை கூட காணாமல் போகவில்லை எனவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து, 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கோவில் கணக்கு வழக்குகள் குறித்த அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறிருக்க, அறநிலையத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன என்பது குறித்தும், கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து அறநிலையத் துறை தரப்பு அறிக்கைக்கு பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிக்க | “எல்லாமே பேட்ச் வொர்க்,.... அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” - குற்றம்சாட்டும் சிபிஎம்
What's Your Reaction?