பழனி பிரசாதங்களில் காலாவதி தேதி அச்சிட்டு விற்பனை செய்ய நடவடிக்கை.. !
பழனி முருகன் கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை அச்சிட்டு விற்பனை செய்யப்படும் என்றும் தரமாக இருப்பதாகவும், கோவில் அறங்காவலர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை [09-02-2023] அடிவாரம் பகுதியில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப்போய் இருந்ததாகவும், பூசனம் பிடித்தும் இருந்ததாகவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யபட்டதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஆகியோர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையங்களில் சனிக்கிழமை [10-02-2023 ] காலை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரமோகன், பழனி கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம், விற்பனை செய்ய அச்சிடப்பட்டுள்ள தேதியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம் என்றும் லட்டு, அதிரசம், முறுக்கு ஆகிய பிரசாதங்களை தயாரித்தவுடன், உலரவைத்து பேங்கிங் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல முறுக்கு, லட்டு, அதிரசம் பிரசாதங்களுக்கு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி அச்சிடப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இனி வரும் காலங்களில் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் அனைத்துக்கும் பில் வழங்கப்படும் என தெரிவித்த அவர், காலாவதியான எந்த பஞ்சாமிர்தமும் இருப்பில் இல்லை என்றும், வருமான நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்படவில்லை; சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் ஒவ்வொரு இந்தியரின் கனவு - எல்.முருகன்
What's Your Reaction?