நம்பாதீங்க..! இன்னும் ஒரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லுவோம்..! - வதந்திகளுக்கு அன்புமணி முற்றுப்புள்ளி

Feb 26, 2024 - 21:39
Feb 26, 2024 - 21:44
நம்பாதீங்க..! இன்னும் ஒரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லுவோம்..! - வதந்திகளுக்கு அன்புமணி முற்றுப்புள்ளி

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என பாமக  தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் 7 தொகுதிகள் வரை பாமகவிற்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக பரவி வரும் தகவல்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார். மேலும் "அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கும் வரை எந்த செய்தி வந்தாலும் நம்ப வேண்டாம்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வடலூரில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அத்தனையும் வதந்திகள். நாங்கள் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் எங்களுடைய நிலைப்பாட்டை உங்களிடம் தெரிவிப்போம். அதுவரை தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள்.

ஒரு கூட்டணி என்பது ஏதோ திடீரென வந்தோமா, முடித்தோமா என்று இருக்கப்போவது இல்லை. பல கட்சிகள் சார்ந்து இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறோம், இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவெடுப்போம், அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கும் வரை எந்த செய்தி வந்தாலும் நம்ப வேண்டாம்." என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow