கொள்கை பலம் உள்ளவரை பாஜகவினரை அச்சப்படுத்திக் கொண்டே இருப்போம் - அன்பில்

பாஜகவினரின் மிரட்டல்களுக்கு திமுக உறுப்பினரின் குழந்தைக் கூட பயப்படாது.

Feb 17, 2024 - 06:36
Feb 17, 2024 - 07:16
கொள்கை பலம் உள்ளவரை பாஜகவினரை அச்சப்படுத்திக் கொண்டே இருப்போம் - அன்பில்

உடன் பிறப்புகளிடம் உள்ள கொள்கை பலமும், மன பலமும் இருக்கும் வரை பாஜகவினரை அச்சப்படுத்தி கொண்டே இருப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையம் பிரிவில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற பெயரில் நாடாளுமன்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "மாநில அரசாங்கத்தால் என்ன செய்துவிட முடியும் என பாரதிய ஜனதா கட்சியினர் திமுகவினரை எள்ளி நகையாடுகின்றனர். திமுக உடன் பிறப்புகளிடம் உள்ள கொள்கை பலமும்,  மன வலிமையும்  இருக்கும் வரை பாஜகவினரை தூங்க விடமாட்டோம், உங்களை அச்சப்படுத்திக் கொண்டே இருப்போம்.அவர்களுடைய அச்சத்தின் வெளிப்பாடாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திமுகவையும், திராவிட மாடல் ஆட்சியையும் குறை கூறி பேசி வருகின்றனர்" என்றார்.

திமுகவினரை நேருக்கு, நேர் எதிர்கொள்ள முடியாமல் வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட ஆயுதங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது.அவைகளுக்கு திமுக உறுப்பினரின் குழந்தை கூட பயப்படாது என்றும் கூட்டத்தில் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது  ஜனநாயகம், பன்முகத்தன்மை, மாநில உரிமை இருக்குமா? என்பதை நிலைநாட்டக்கூடிய தேர்தல் என்றும் குறிப்பிட்டார். டெல்லி செல்லோ என்னும் பெயரில்  இந்திய விவசாயிகள் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள பிரதமர் அபுதாபியில் கோவிலை திறந்து வைத்து வருகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow