’thug life’ கொடுத்த ஆண்டவர்..! இப்ப இல்ல.. ரெண்டு நாள்ல சொல்றேன்.. கூட்டணி கேள்விக்கு எஸ்கேப்பான கமல்ஹாசன்..!
2 நாட்களில் நல்ல செய்திகளுடன் திரும்ப உங்களை சந்திக்கிறேன்
‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பிய நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நல்ல செய்தி ஒன்றைச் சொல்வதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலை தனித்துப் போட்டியிடப் போகிறாரா? திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவாரா? அப்படி இணைந்தால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவாரா என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு எழுந்து வருகிறது.
குறிப்பாக, பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யத்தின் ஆண்டு விழா அழைப்பிதழில் “நாடாளுமன்றத்தில் நம்மவர்” என்ற வாசகம் உள்ளதைக் குறிப்பிட்டு, அவர் தனித்துப் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பேச்சு எழுகிறது. மறுமுனையில், அவர் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும், இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தலைமையிடத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இவரும் பங்குகொண்டு தமது நெருக்கத்தை நிரூபித்தார்.இதனால் கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஷெட்யூல் முடிந்து, இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த ஜனவரி 31-ம் தேதி அமெரிக்கா சென்ற நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “தக் லைஃப் திரைப்படத்தின் முன்னேற்பாடு பணிகளை முடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறேன். 2 நாட்களில் நல்ல செய்திகளுடன் திரும்ப உங்களை சந்திக்கிறேன்.வெளிநாட்டில் இருந்து எந்த நல்ல முடிவையும் நான் எடுத்து வரவில்லை. நல்ல முடிவுகளை இப்போதே சொல்ல முடியாது. நாளை மறுநாள் சொல்கிறேன்” என்றார்.
ஏற்கனவே கமல்ஹாசன் கட்சிக்கு நகர்ப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் கமல்ஹாசன் வீட்டுக் கதவுகளை எந்தெந்தக் கட்சிகள் தட்டும், அல்லது எந்தெந்த கட்சி அலுவலகங்களை அவரது படை எட்டும் என்பதெல்லாம் இரண்டு நாட்கள் கழித்தே தெரியும்.
What's Your Reaction?