இலங்கை சிறையில் வாடும் நாகை, காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க கோரிக்கை

தமிழக மீனவர்களின் 135 விசைப்படகுகளையும் 46 மீனவர்களையும் மீட்டுத்தர பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Jan 2, 2024 - 15:18
Jan 2, 2024 - 15:20
இலங்கை சிறையில் வாடும் நாகை, காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க  கோரிக்கை
இலங்கை சிறையில் வாடும் நாகை, காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க  கோரிக்கை

இலங்கை சிறையில் வாடி வதங்கும் நாகை, காரைக்கால் பகுதிகளைச்சேர்ந்த மீனவர்களை எப்போது மீட்பார்கள் என ஏங்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த கடல்நீளத்தில் 15 சதவீத கடல் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தமிழகம் மீன் விற்பனையிலும், மீன் ஏற்றுமதியிலும் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மொத்தம் 600 கிராமங்களில் வசிக்கும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர். 15 ஆயிரம் விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் மீன் பிடித்தொழில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள  ஒட்டுமொத்த மீனவர்களும் பெரும் கவலையடைந்து வருகின்றனர். 

மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். இலங்கை சிறையில் மீனவர்கள் அடைபட்டு வாடி வரும் நிலையில் அவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாகை, காரைக்கால் பகுதிகளைச்சேர்ந்த 46 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைபட்டு வாடி வருகின்றனர். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களது குடும்பத்தினர் கவலையுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்களிடம் பேசினோம். “ஜெயில்ல இருக்குறவங்க உசுரோட இருக்காங்களான்னு கூட தெரியலை. அவங்களை தொடர்பு கொள்ளவும் முடியலை. எப்ப விடுதலை செய்வாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். அவங்க அங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க நாங்க எந்தவித வருமானமும் இல்லாம குழந்தைகளை வச்சிக்கிட்டு சாப்பாட்டுக்கே தவிச்சுக்கிட்டு இருக்கிறோம். நம்ம அரசாங்கம் விரைவில் அவங்களை விடுதலை செஞ்சு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக்கொள்கிறோம்.” என்றபடி கதறினர்.

இது குறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார், “இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் மீனவர்கள் நவீன ஆயுதங்களுடன், அதிவிரைவு விசைப்படகுகளில் வந்து நமது கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மரபுவழி மீனவர்களை தாக்கி கொள்ளையடித்துச்செல்கின்றனர். தற்போது இலங்கை கடற்படையினரும் மீனவர்களை தாக்கி கைது செய்வதோடு, படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டு போய்விடுகின்றனர். இது குறித்து பிரதமருக்கு பலமுறை கடிதம் மூலம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது இலங்கையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 135 விசைப்படகுகளையும் 46 மீனவர்களையும் மீட்டுத்தர பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இனிமேலும் நமது பாரம்பரிய உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் அதனை அடைவதற்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தரவேண்டும்.” என்றார் கண்கள் சிவக்க.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow