அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு...லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீதிபதி சரமாரி கேள்வி...

இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா என நீதிபதிகள் கேள்வி

Feb 29, 2024 - 19:36
Feb 29, 2024 - 20:36
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கு...லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீதிபதி சரமாரி கேள்வி...

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின் விசாரணை நடத்த வேண்டும் என்று நினைப்பு வந்தது ஏன்? சாதாரண வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றப்படுமா? என, லஞ்ச ஒழிப்புத்துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வாதங்களை எடுத்து வைத்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில், முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான் எனவும், இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலை பெற்றே மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டார்.

மேல் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.அதற்கு ஏழு ஆண்டுகளாக ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்து வருவதாக புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.

இந்த ஏழு ஆண்டுகளில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா? 2016ஆம் ஆண்டு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பதில்மனு தாக்கல் செய்யும் போது மேல் விசாரணை நடத்த தோன்றவில்லையா? 2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் என தோன்றியது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதே நடைமுறையை சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow