கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை
மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தனர்.
ஐபிஎல் போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பியதாக, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.அதில் 100 கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தாக்கல் செய்த பதில் மனுவில், தோனியின் குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், 17 கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி ஜீ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக தோனி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 17 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஜீ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜீ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான தோனிக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி செய்தியாக வெளியிடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த குற்றச்சாட்டுகளில் துளியளவும் சந்தேகம் இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும், ஐபிஎல் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பாக நீதிபதி முட்கல் குழுவும் கூறவில்லை என குறிப்பிட்டது.
இந்த மனுவை பொறுத்தவரை, ஜீ நிறுவனத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறுக்கு விசாரணை தான் என்றும், ஆதாரங்களுக்காக இந்த கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளதால், ஜீ தொலைக்காட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்நிலையில், மகேந்திர சங்க தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தார். அவரது மனுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர அனுமதி அளித்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுவரை ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் உரிய விளக்கம் அவகாசம் அளித்தும் அளிக்கப்படவில்லை.இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டனர். அப்போது, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தனர்.
What's Your Reaction?