பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு-திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமின்..!

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 4 வயதில் குழந்தை இருப்பதை கருத்தில் கொண்டு, 2 வாரத்திற்கு பல்லாவரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்,

Mar 1, 2024 - 16:38
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு-திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமின்..!

வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன்,  அவரது மனைவி மர்லினா ஆகியோர், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்  கீழ் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 01) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாணவியின் கல்வி சான்றிதழ்கள் இணைத்து வழங்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை விசாரணையில், பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளது. விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால், காவல் துணை கண்கானிப்பாளர் அல்லது உதவி ஆணையர் தகுதியில் உள்ளவர்களே வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என்பதால், காவல்துறை இயக்குநர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். 

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 4 வயதில் குழந்தை இருப்பதை கருத்தில் கொண்டு, 2 வாரத்திற்கு பல்லாவரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், ரூ.10,000-கான இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow